“நகரசபை ஒத்துழைப்பு நல்கினால் மன்னார் நகரத்தை எழில்மிகு நவீன நகராக்க முடியும்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO)-கட்சி, அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணந்து செயற்படுவதன் மூலமே, மக்களுக்கான நன்மைகளையும், பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையும் செய்ய முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இந்த வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு உப்புக்குளம் அல்பதாஹ் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்..

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், மாகாணசபை உறுப்பினர் அலிகான் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

மன்னார் உப்புக்குளத்தில் வாழும் முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், இந்துக்கள் அனைவரும் நீண்டகாலம் தொட்டு ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்கின்றனர். யுத்த காலத்துக்குப் பிறகு இந்தப் பிரதேசங்களில் எமது பணிகளை ஒற்றுமையுடன் இணைந்து முன்னெடுக்கத் தொடங்கியுள்ளோம். இதனைத் தடுப்பதற்கு பலர் பலவகைகளில் செயற்படுகின்றனர். ஆகையால், இந்த ஒற்றுமையை பாதுகாக்கும் ஒரு புத்திசாலிச் சமூகமாக நாம் இருக்க வேண்டும்.

உப்புக்குளம் கிராமத்தைப் பொறுத்தவரையில் யுத்த காலத்துக்குப் பின்னர், காணிப் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி நாம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்தும் அவ்வாறானவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்ய எண்ணியிருக்கிறோம்.

உப்புக்குளத்தில் அமைந்துள்ள அல்பத்தாஹ் விளையாட்டு மைதானத்தை நவீன முறையில் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன், மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் ஆகிய பிரதேசங்களிலும் விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துடுள்ளோம். .

மன்னார் நகரம் ஒரு பாரிய அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்ற ஆசை எம்மிடம் இருந்தாலும், அந்த ஆசையை நிராசையாக்கும் செயற்பாடுகளை சிலர் மேற்கொள்கின்றனர். இதனை விடுத்து நகர சபை நிர்வாகம் எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நகரத்தின் நலனுக்காக பல நல்ல வேலைத்திட்டங்களையும் முன்வைக்க வேண்டும்.

தேர்தல் காலங்களில் நாம் கட்சி சார்ந்து அரசியல் செய்ய முடியும். ஆனால், தேர்தல் காலம் முடிந்த பிறகு கட்சி, அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணந்து செயற்படுவதன் மூலமே, மக்களுக்கான நன்மைகளையும், பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையும் செய்ய முடியும். ஆகையால், எதிர்காலத்தில் அவ்வாறான சிந்தனையுடன் மன்னார் நகரசபை செயற்பட வேண்டும் என்று அன்பாக அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

-ஊடகப்பிரிவு-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *