நீதிபதியின் கையடக்கத் தொலைபேசியை திருடிய இளைஞர் கைது

(UTV|JAFFNA)-நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திருடிய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத்திருவிழா நேற்று (09) நடைபெற்ற போது, மாலை மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, நீதிபதியின் மெய்ப் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் காரின் கண்ணாடியைப் பூட்டவில்லை. காரிற்குள் இருந்த நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

பூசை வழிபாட்டினை நிறைவு செய்து விட்டு வந்த போதே, காரில் இருந்த கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுள்ளதை உணர்ந்த நீதிபதி உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், நல்லூர் ஆலய வளாகத்தில் நின்ற இளைஞர் திருடிய சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்த நபரிடம் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *