மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

(UDHAYAM, COLOMBO) – இன்று மஹா சிவராத்திரி தினமாகும்.

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, தாம் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

இதன்படி சிவராத்திரி உருவானதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சம் அளிக்கப்படும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *