பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டது எவ்வாறு?

(UTV|SAUDI)-பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலையில் ​சௌதியின் பங்கு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மூத்த அமெரிக்க அதிகாரி சௌதி அரேபியாவின் முடியரசருடன் ரியாதில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்டீஃபன் முஷின், முகமத் பின் சல்மானை திங்களன்று சந்தித்தார். அக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலில் கசோஜி தூதரகத்துக்கு வந்த நாளிலே திரும்பி சென்றுவிட்டார் என செளதி கூறி வந்தது பின் கடந்த வெள்ளி அன்று முதன்முறையாக கசோஜி இறந்துவிட்டார் என்றும் சண்டை ஒன்றில் அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் குறித்த அனைத்து உண்மையும் வெளியிடப்போவதாக துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் தெரிவித்தார்.

முஷினும் சல்மானும், செளதி – அமெரிக்க மூலோபாய கூட்டுத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து உறுதிப்படுத்தியதாக செளதி அரேபிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரியாதில் நடந்த இந்த சந்திப்பு குறித்து அமெரிக்கா இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை..

செளதி அரேபியாவில் இன்று தொடங்கும் முதலீடுகள் தொடர்பான மாநாட்டில் முஷின் உட்பட, மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பிற முக்கிய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் கலந்துக் கொள்ளபோவதில்லை என தெரிவித்திருந்தனர்.

ஜமால் விவகாரம் தொடர்பான பதில் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவில்லை என டிர்மப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

“நான் கேட்டது எனக்கு திருப்தியாக இல்லை” என வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் டிரம்ப்.

இருப்பினும், “அணு ஆயுதங்கள் தொடர்பாக செளதி அரேபியாவுடன் ஏற்பட்டுள்ள பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டி, நமது நாட்டிற்கு வரும் முதலீடுகளை இழக்கவிரும்பவில்லை” என தெரிவித்திருந்தார்.

“இதுகுறித்த உண்மையை கண்டறிவோம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

செளதியின் அதிகாரமிக்க நபராக கருதப்படும் முடியரசர் சல்மானுடன் தான் இதுகுறித்து ஆலோசித்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இதுவரை இந்த கொலை தொடர்பாக 18 பேரை கைது செய்ததாகவும், முகமது பின் சல்மானின் உதவியாளர்கள் இருவரை பணி நீக்கம் செய்ததாகவும், சல்மானின் தலையமையில் உளவுத்துறை முகமையை மறுசீரமைக்க குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் செளதி தெரிவித்துள்ளது.

செளதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடேல் அல் ஜுபேர், ஜமாலின் கொலை ஒரு “மோசமான நடவடிக்கை” என தெரிவித்துள்ளார்.

“அனைத்து உண்மைகளையும் கண்டுபிடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த கொலைக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனையளிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார். “ஜமாலின் உடல் எங்குள்ளது என்று செளதிக்கு தெரியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த கொலை குறித்து சல்மான் ஆணையிடவில்லை” எனவும் அவர் தெரிவித்தார். துருக்கி அரசுக்கு நெருக்கமான ஊடகமான யேனி சபாஃக், கொலைக்கு பிறகு சல்மானுக்கு நான்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்ததற்கான தகவல்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்திருந்தது.

செளதி அரேபியாவுக்கு திரும்ப போகவிடாமல் கழுத்து நெறிக்கப்பட்டு ஜமால் கொல்லப்பட்டார் என செளதி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதன்பின் அவரின் உடல் ஒரு கம்பளியில் சுற்றப்பட்டு, கொலையில் தொடர்புடைய உள்ளூர் நபரிடம் கொடுக்கப்பட்டது. செளதியை சேர்ந்த அந்த நபர் ஜமாலின் உடைகளை உடுத்திக் கொண்டு தூதரகத்தை விட்டு வெளியேறினார்.

பாதுகாப்பு கேமராவில் செளதி முகவர் ஜமாலின் உடையணிந்து செல்வது பதிவாகியுள்ளது என மூத்த துருக்கி அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

போலியான தாடியுடன் அவர் தூதரகத்தின் பின் கதவு வழியாக செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

செளதி தூதரக ஊழியர் ஒருவர் இஸ்தான்புல்லில் ஆவணங்களை எரிப்பது போன்ற காட்சிகளையும் துருக்கி ஊடகம் வெளியிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *