சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி.
கடந்த 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் வேண்டுகோளின்பேரில் இந்த நடவடிக்கையை கனடா மேற்கொண்டது. வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை, ஹூவாய் நிறுவனம் மீறியதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.
மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டிருப்பது மனித உரிமை மீறல் என்று சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வான்கூவர் கோர்ட்டில் மெங்வான்ஜவ், கடந்த வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பாக 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
மெங்வான்ஜவ் சார்பில் தாக்கலான ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த 2 விவகாரங்களிலும் திங்கட்கிழமை (இன்று) தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இந்த நிலையில் மெங்வான்ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று கனடாவை சீனா நிர்ப்பந்தம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக அந்த நாட்டுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மெங்வான்ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று பீஜிங்கில் உள்ள கனடா தூதருக்கு வெளியுறவு துறை துணை மந்திரி லீ யுசெங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் சீனாவின் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு அவர் வரவழைக்கப்பட்டுள்ளார்” என கூறிப்பட்டுள்ளது.
மேலும், “மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்” எனவும் கனடாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “ அமெரிக்கா சொன்னதற்காக, மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டது, அவரது சட்டப்பூர்வ உரிமைகளை மீறிய நடவடிக்கை ஆகும். இது சட்டத்தை புறக்கணித்த செயல். அர்த்தமற்றது. கைது செய்யப்பட்டுள்ளவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரது சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளுக்கு கனடா பொறுப்பேற்க வேண்டியது வரும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “ சீனாவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது” என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.