(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலையில் சிறைக் கைதிகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
இது தொடர்பாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதாவது:
சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் என்பனவற்றைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்ட நடவடிக்கைகளின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பொறுப்பும், பாதுகாப்பும் சிறைச்சாலைகள் திணைக்களத்தைச் சாரும். மோசமான குற்றச் செயல்களில் தொடர்புபட்டதாகக் கருதப்படும் சந்தேகநபர்களை அழைத்துச் செல்லும் போது பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தேகநபர்களை அழைத்துச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி முறையான பயிற்சிகளும், துப்பாக்கிகளும் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை கவலை அளிப்பதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.