வழிதவறிய சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வழிதவறி காட்டுக்குள் சென்ற 3 வயது சிறுவனை 2 நாட்களாக கரடி ஒன்று பாதுகாத்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு கரோலினாவில் உள்ள கிராவன் கவுண்டியில் எர்னல் நகரைச் சேர்ந்த சிறுவன் கேஸே ஹதாவே (வயது 3). கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று தனது பாட்டி வீட்டில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாடி முடித்துவிட்டு மற்ற குழந்தைகள் வீட்டுக்குச் சென்ற நிலையில் கேஹே ஹதாவே மட்டும் வூட்ஸ்காட்டுப் பகுதிக்குள் வழிதவறிச் சென்றுவிட்டான்.

இந்நிலையில், கேஸே ஹதாவே நீண்டநேரம் ஆகியும் வீட்டுக்கு வராதது குறித்து அவரின் பெற்றோர் கவலையடைந்து தேடத் தொடங்கினர். மேலும், பொலிஸார், தன்னார்வ அமைப்புகளுக்குத் தகவல் அளித்து கேஸே ஹதாவேவை தேடும் பணியைத் தீவிரப்படுத்தினார்கள்.

நார்த் கரோலினா வனப் பகுதியில், கறுப்புநிறக் கரடிகள் அதிக அளவில் வாழ்கின்றன. இந்தக் கரடிகளால் சிறுவன் ஹதாவே தாக்கப்படலாம் எனக் கருதி தீவிரமாகத் தேடினார்கள். மேலும், இரவுநேரத்தில் -3 டிகிரியாக குளிர் நிலவும், குளிரைத் தாக்கும் உடையையும் சிறுவன் ஹதாவே அணியவில்லை என்பதால், பெற்றோர் மிகுந்த பதற்றமடைந்தனர். ஏறக்குறைய இரு நாட்கள் ஹெலிகொப்டர், ட்ரோன்கள், பொலிஸார், தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், இரு நாட்களாக மழையும் பெய்ததால், சிறுவனின் நிலை குறித்து அனைவரும் கவலையடைந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை ஊட்ஸ் காட்டுப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் வனப்பகுதிக்குள் சாகசப் பயணம் சென்ற பெண்ணுக்குக் கேட்டுள்ளது. இதையடுத்து, அந்த இடத்துக்குச் சென்ற பெண் அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஒரு மிகப்பெரிய கரடி, சிறுவனைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை அந்தப் பெண் பார்த்துள்ளார். அப்பெண்ணைப் பார்த்தவுடன் அந்தக் கரடி அங்கிருந்து சென்றது. அதன்பின் சிறுவன் ஹதாவேவை அழைத்துக் கொண்டுவந்து கிராவன் கவுண்டி பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

சிறுவன் ஹதாவே கிடைத்த மகிழ்ச்சியில் அவனின் தாய் பிரணியா ஹதாவே ஃபேஸ்புக்கில் பதிவிடுகையில், ” எனது மகனை ஒரு பெரிய கரடி ஒன்று 2 நாட்களாகக் காட்டில் பாதுகாத்து வைத்துள்ளது. கடவுள்தான் அவனுக்கு ஒரு நண்பனை அனுப்பிப் பாதுகாத்துள்ளார். எப்போதாவது இதுபோல் அதிசயங்கள் நடக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *