முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்

(UTV|COLOMBO)-நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு  மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச்   காணியையேனும்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க பிரதமர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்று (16) நடைபெற்ற போது அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“தமது சொந்த மாவட்டமான முல்லைத்தீவில் சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் குடியிருந்த இந்த மக்கள் வெளியேறி, இப்போது மீளக்குடியேற திரும்பியுள்ள போதும், வீடுகளை கட்ட காணி இல்லாமல் அந்தரித்து உள்ளனர்.  இவர்களுக்கென இந்தப்பிரதேசத்தில் 900 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  எனினும் இதுவரை அவை வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுகின்றது. இதற்காக 9 முறை காணிக்கச்சேரி  நடத்தப்படுள்ளது தற்போது குடியேற வந்து எஞ்சி இருக்கும் 700 குடும்பங்களில் சுமார் 500 குடும்பங்களுக்காவது தலா 20 பேர்ச் காணியையேனும்  பெற்றுக்கொடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

“இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மெனிக் பார்மில் தஞ்சம் அடைந்து இருந்த முல்லைத்தீவு மக்களை மீள்  குடியேற்ற நான் அரும்பாடு பட்டவன்.

மீள் குடியேற்ற அமைச்சராக  நான் அப்போது இருந்த போது, பரிதாபமான நிலையில் இருந்த இந்த மக்களை குடியேற்றுவதில் முன்னுரிமை வழங்கினேன். 40 சத வீதமான சகோதர தமிழ் மக்கள் அப்போது உடன் குடியேற்றப்பட்டனர். முற்றாக அழிந்தும் தகர்ந்தும் கிடந்த இந்த பிரதேசத்தில் 80 சத வீதமான அபிவிருத்தியை  மேற்கொண்டோம்.  ஆனால் இந்த மாவட்டத்தில் சொற்பளவில் வாழும் இன்னும் ஒரு சிறுபான்மை மக்கள் குடியேறுவதில் தடைகள் இருக்கின்றன என்று அமைச்சர்  றிஷாட்  பதியுதீன் அங்கு தெரிவித்தார்.”

இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட சார்ல்ஸ் நிர்மலநாதன் எம் .பி ,அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அமைச்சர்  றிஷாட் பதியுதீன்  இங்கு மேலும் தெரிவித்த போது,

நல்லிணக்கம், செளஜன்யம் என பேசப்பட்டு வரும் இந்த நாட்டில் அனைவருமே சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக வலியுறுத்தினார்

-ஊடகப்பிரிவு –

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *