குழந்தையை மறந்து விமானத்தில் ஏறிய தாய்…

சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தனது குழந்தையை மறந்துவிட்டதாகக் கூறியதால் அந்த விமானம் அவசரமாக ஜெட்டாவில் தரையிறங்க நேர்ந்தது.

சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் அப்துல் அஜிஸ் விமான நிலையத்தில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் நோக்கிச் சென்ற சவுதிக்கு சொந்தமான விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த ஒரு பெண், தனது குழந்தையை ஜெட்டா விமான நிலையத்தின் வரவேற்பு பகுதியில் மறந்து விட்டுவிட்டு விமானத்தில் ஏறி விட்டதாகவும் குழந்தையை கொண்டு வருவதற்காக விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்ல வேண்டும் எனவும் பணிப்பெண்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. விமானியும் ஜெட்டா விமான நிலையத்தை தொடர்புகொண்டார். நிலைமையை எடுத்துக்கூறி அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

வழக்கமாக, விமானங்களில் மிகவும் ஆபத்தான கோளாறு, பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இதுபோன்ற அனுமதி அளிக்கப்படும்.

இந்நிலையில், குழந்தையை தவறவிட்டு விமானத்தில் ஏறிவிட்ட அந்த தாயின் வேண்டுகோளின்படி ஜெட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க ஜெட்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சிறிது நேர ஆலோசனைக்கு பின்னர் அனுமதி அளித்ததாக சவுதி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *