உக்கிரமான கலாசார மோதல்கள் மத முரண்பாடுகளுக்கு வழிவகுக்குமா? அரபு லீக் – ஐரோப்பிய யூனியன் என்ன செய்யும்!

நியூஸிலாந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களின் எதிரொலிகள் அதன் வலிகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இவ்வாறான வலிகளை இலங்கையர் எப்போதோ புரிந்திருப்பர். பொதுவாக வன்முறைகள், பயங்கரவாதம்,பலாத்கார உயிர்ப்பறிப்புகள், உடமை அழிப்புகளை அனுபவித்தோர் அனைவரும் சமாதான விரும்பிகளாகவே இருப்பர்.நியூஸிலாந்தில் நடந்தது பயங்கரவாதச் செயலா?அல்லது தனிநபர் மன நிலைக் கோளாறா? என்ற கோணத்தில் அவிழ்க்கப்படும் விவாதங்கள் அவுஸ்திரேலியக் கண்டத்தில் பயங்கரவாதம் இல்லை என்பதை நிறுவும் பிரயத்தனங்களாகவே பார்க்கப்பட வேண்டும்.உண்மையில் நியூஸிலாந்து அமைதிப்பூங்காவாகவே இது வரைக்கும் இருந்தது. இனி எப்படி இருக்கப்போகிறது என்பதுதான் பலரது அச்சம். இதற்கிடையில் கடந்த திங்கள் கிழமை 18ஆம் திகதி நெதர்லாந்தில் நடத்தப்பட்ட பழி தீர்க்கும் தாக்குதல் மூவரின் உயிரைக்காவி , 9 பேரை ஊனமாக்கியுள்ளது. பழி தீர்த்த வெற்றி களிப்பில் குதூகலித்த  இரண்டு மொரோக்கோ இளைசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான பழி வாங்கும் படலங்கள் ஐரோப்பிய, அவுஸ்திரேலிய கண்டங்களில் தொடரக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை. இவ்வாறு தொடர்வது கிறிஸ்தவ – முஸ்லிம் கலாசார மோதல்களை உக்கிரம் அடையச்செய்யும்.

இந்தக் கெடுபிடிகளை அரசாங்கங்கள் அவிழ்க்காவிட்டாலும் பாதிக்கப்படப்போகும் உறவினரும்,சிலரின் பழிவாங்கும் மன நிலைகளும் கட்டவிழ்க்கலாம் .

நந்தவனமாகவுள்ள நியூஸிலாந்தில் இலட்சக்கணக்கான உல்லாசப் பயணிகளின் வருகை அந்நாட்டுக்கு அதிகரித்த அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கிறது. விவசாயத்தில் தன்னிறைவு (பண்ணை) கைத்தொழில் வளர்ச்சி,தொழில் நுட்ப மேம்பாடுகள் நியூஸிலாந்தை உலகின் சொர்க்கா புரியாக்கிற்று. ஒரு கண்டத்தில் இரண்டு நாடுகள் மட்டுமுள்ளதென்றால் அது அவுஸ்திரேலியாக் கண்டம்தான். இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் மனிதவலு போதாது என்பதற்காக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் வாழ வழிதிறந்து கொடுத்தது நியூஸிலாந்து. இரண்டு பள்ளிவாசல்களிலும் கடந்த (15) வௌ்ளிக்கிழமை பலியானோரை அவதானித்தால் அத்தனைபேரும் அமைதியான வாழ்வு தேடி புகலிடம் புகுந்தோராகவே உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்டவனின் திருப்தியுடன் அமைதியாக வாழ்வு துறந்தனர். பலஸ்தீனர் 19,இந்தோனேஷியா 06, துனூஸியா 05, பங்களாதேஷ் 05,இந்தியா 05, மொரோகோ 04, யெமன் 02,ஈராக் 02,ஜோர்தான் 02, பாகிஸ்தான் 02 சிரியா 01,ஆப்கானிஸ்தான் 01 ஈரான் 01,சவூதி அரேபியா 01 என மொத்தமாக 57 பேரின் ஆத்மாக்கள் ஆண்டவனின் சந்நிதானத்தில் சரண் புகுந்துவிட்டன.இதில் நான்கு பெண்கள்,ஒரு ஐந்து வயதுக் குழந்தையும் உள்ளடங்கும்.”அப்பா வெடிக்கிறது வாருங்கள்” என்ற குழந்தையின் ஓசையைக் கேட்கும் வாய்ப்பை, தாக்குதல்தாரியின் அடுத்த குண்டு அந்த தந்தைக்கு வழங்கவில்லை.நாற்காலியில் கணவனை பள்ளிவாசலுக்கு அனுப்பிவிட்டு வௌியே காத்து நின்ற மனைவியை,சடலமாகவே காணக்கிடைத்தது கணவனுக்கு. அங்கவீனர் என்பதால் ஓர் ஓரத்தில் நின்று தொழுத இவர் துப்பாக்கியின் இலக்கிலிருந்து தப்பித்தார். இப்படி எத்தனையோ சம்பவங்கள் எம் மனங்களை வெடிவைத்து தகர்க்கின்றன.

எத்தனை குண்டுகள் வைத்தாலும் ஆப்கானிஸ்தான் “பாமியான்” புத்தர் சிலை போன்று சமாதான நம்பிக்கையில் நிமிர்ந்து நிற்கவே எனக்கு விருப்பம்.என்ன செய்வது? பள்ளிவாசல்கள்,தேவாலயங்கள்,ஆலயங்கள், விகாரைகளில் வெடிப்பவைகள் மனிதாபிமானத்தை சிதறடிக்ககையில் எவ்வாறு என் மனம் நிமிர்ந்து நிற்க முடியும்.

உண்மையில் இந்நாட்வர்கள் எல்லோரும் தாயகத்தில் வாழ இயலாத அளவுக்கு வன்முறைகள் வெடித்து விட்டதென்ற அவநம்பிக்கையிலே இங்கு வந்தனர். இவர்களை,அகதிகளாக்கியது எதுவென்ற தேடலே எனது தேவை. நல்லிணக்கத்தை எதனால் ஏற்படுத்த முடியும்? அமைதியை எப்படிக் கொண்டு வர இயலும்? எதனால் இவை இல்லாது போகின்றன. மத முரண்பாடுகளா அரசியலை வளர்க்கிறது? அல்லது அரசியலா மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கிறது?. இல்லாவிட்டால் எவரதும் தேவைக்காகவா இவ்வாறான பேதங்கள் உருவாக்கப்படுகின்றன.இந்நிலைமைகள் இவ்வாறு கூர்மையடைய விடாமல் தடுப்பது எப்படி? .

இத்தாலியில் சர்வதேச சர்வமதகுருமார்கள் மாநாடொன்றை நடத்தி உலகில் அமைதியைக் கொண்டுவர யோசனை முன்வைக்கப்பட்டதும் எனக்கு ஞாபகம் வருகிறது. “பூமி குழப்பமாகி விட்டது. வேற்றுக் கிரகத்திற்குச் சென்று மனிதர்களை வாழச் செய்வோம்” என்றும் சில ஆலோசனை கூறப்பட்டதாம். அந்தக்கிரகத்திற்கும் மனிதன் தானே செல்கிறான் எனச் சில மதகுருமார் விரக்தியுடன் பதிலளித்தனர். மானுடன் வெட்கப்பட வேண்டிய அர்த்தமே இதிலுள்ளது. மனிதனும், மனித அறிவும் உள்ள இடத்தில் தானே வன்முறைகள். விலங்குகள் வாழும் காடுகளில் எந்தச் சண்டையும் இல்லையே! என்பதைத்தான் அந்த மத குருமார் உணர்த்தி உள்ளனர்.அமைதியைத் தோற்றுவிப்பதில் மதங்கள் தோல்வியடைந்துள்ளதா? என்ற விவாதங்களும் இந்த இத்தாலி சர்வதேச சர்வமத மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

பொதுவாக 2001 இல் நடத்தப்பட்ட உலக வர்த்தகத் தாக்குதலின் பின்னர் பயங்கரவாதத் துக்கு எதிரான போரென அமெரிக்கா நடத்திய இராணுவ நடவடிக்கைகள், காலப்போக்கில் இஸ்லாத்துக்கும், கிறிஸ்தவத்திற்கும் எதிரான கலாசார மோதல்களாகவே பார்க்கப்பட வைத்தன.இஸ்லாமிய நாடுளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (NATO) நாடுகள் நடந்து கொண்ட எல்லை மீறிய போக்குகள் இந்தக் கருத்துக்களைப் பலப்படுத்தியது.இவற்றின் ஆபத்துக்களை உணர்ந்த அமெரிக்காவின் முஸ்லிம் நட்பு நாடுகள் நேட்டோ படையணியின் போர் வியூகங்களை மாற்றுமாறு ஆலோசனை கூறியதால் ஈராக், லெபனான், துனிசியா,எகிப்து.ஆப்கானிஸ்தான் யெமன் ஆகிய நாடுகளில் இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற் றப்பட்டன.எனினும் குவான்தனமோ, அபுகைராப் சிறைச்சாலைகளில் முஸ்லிம் கைதிகள் நடத்தப்பட்ட விதங்கள் முஸ்லிம்களால் மட்டுமல்ல மானுடனால் மறக்க முடியாதவைகள்.இந்த வைராக்கியங்களை வைத்தே முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்கள் இயக்கப்படுவதாக ஐரோப்பிய யூனியன்  பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த வைராக்கியத்தைப் பழிவாங்கும் வகையில் ஆங்காங்கே ஐரோப்பிய முஸ்லிம்கள் சில கடும்போக்கு இளைஞர்களால் குறிவைக்கப்படுவதும் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிகழ்வுகளே இஸ்லாமியப் போராளிகளை இன்னும் வாழ வைக்கிறது.

நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்தப்பட்டு 24 மணி நேரத்தில் முகநூல்களில் 1.5 மில்லியன் வீடியோக்கள் வௌியிடப்பட்டுள்ளன.எவ்வித பதற்றமும் இன்றி மிக இலாகவமாக தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் நியூஸிலாந்தின் பாதுகாப்பு ஓட்டைகளையும் பலவீனங்களையும் பலருக்குப் புலப்படுத்தியுள்ளது.இதனால் ஆத்திரமடைந்நத நியூஸிலாந்து இவற்றைத் தடை செய்துள்ளதுடன் இவ்வாறு வௌியிடுவேரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது கள்வன் இருந்தால்தானே காவல்,நியூஸிலாந்தில் இதுவரைக்கும் இப்படியொரு கொடூரம் நடக்கவில்லை என்பதால் அந்நாட்டு அரசும் பாதுகாப்பு விடயங்களை கண்டுகொள்ளாமல் இருந்தது.இனிமேல் கடுமையான கண்காணிப்புகள் அறிவிக்கப்படலாம். உண்மையில் நியூஸிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா ஆர்கர் இத்தாக்குதலால் கடும் மனவேதனை அடைந்துள்ளமை அடுத்தடுத்து அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் புரிய வைத்தன. இத்தனைக்கும் தாக்குதல் தாரியான டெரண்டின் பயன்படுத்திய அதி நவீன துப்பாக்கியின் ஒவ்வொரு பாகங்களிலும் ஒவ்வொரு விடயங்கள் எழுதப்பட்டிருந்தன. அவை அனைத்தும் இஸ்லாம்,மற்றும் முஸ்லிம் நாடுகள், தளபதிகளை வீழ்த்திய பெருமைகளைக் கூறுவதாக இருந்தது. இதனால் பதற்றமடைந்த அரபுலீக், இஸ்லாம் – கிறிஸ்தவ மதங்களிடையே விரிசலடையும் இடைவௌிகளை இறுக்கி ஐரோப்பா ஆபிரிக்கா,ஆசிய நாடுகளில் இஸ்லாத்துக்கும்,கிறிஸ்தவத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் புரிந்துணர்வுக ளை வளர்த்து மதங்களின் பெயரில் இயங்கும் வன்முறையாளர்களை அடக்குவது பற்றி ஆலோசித்துள்ளது.அரபு லீகின் தலைவரான அஹ்மத் அபுல் கீத் ஐரோப்பிய நாடுகளுடன் அவசரச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 எகிப்தைச் சேர்ந்த இவரது நாட்டிலும் ஐரோப்பாவுக்குள எதிரான மனநிலையில் அதிகளவு மக்கள் உள்ளனர்.22 அரபு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்நத அரபு லீக்கில் ஆபிரிக்கா,வடக்கு ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளிலே தற்போது மத அடிப்படை வாதங்கள் (இஸ்லாம்,கிறிஸ்தவம்) கூர்மையடைவதாகக் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.நைஜீரியாவில் “பொகாஹரம்” “மேற்கத்தேய கல்வி பாவமானது” என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய அமைப்பே உள்ளது. மேலும் குடியேற்றக் கொள்கைக்கு எதிரானோரென  ஐரோப்பாவில் சில இளைஞர்களும் தாயாராகின்றனர்.இவை கலாசார (கிறிஸ்தவம்,இஸ்லாம்) மோதல்களுக்கான ஆயத்தங்களாகவே அஞ்சப்படுகிறது.1945 மார்ச் மாதம் 22 இல் ஆறு அரபு நாடுகளைக் கொண்டு ( எகிப்து,ஈராக், ஜோர்தான், லெபனான்,சிரியா, சவூதி) ஆரம்பிக்கப்பட்ட இந்த அரபு லீக்கில் இன்று 22 நாடுகள் இருந்தும் ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் இருந்தும் கலாசார மோதல்களைப்  பாதுகாக்க முடியாமல்போவது மானுடத்தின் துரதிஷ்டமா?அல்லது மதங்களின் கையாலாகத்தனமா?

-சுஐப் எம் காசிம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *