இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி இன்று…தென்னாபிரிக்காவை வெல்லுமா இலங்கை?

(UTV|COLOMBO) இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, செஞ்சூரியனில் இடம்பெறவுள்ளது.

இத்தொடரின் முதற்போட்டியில் சுப்பர் ஓவர் வரை சென்று இலங்கை தோல்வியடைந்தபோதும், அப்போட்டியில் அணித்தலைவர் லசித் மலிங்க, இசுரு உதான ஆகியோரின் இறுதிநேர சிறப்பான பந்துவீச்சுடன், ஜெஃப்ரி வன்டர்சே, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய உள்ளிட்ட சுழற்பந்துவீச்சுக் குழாம் கட்டுக்கோப்பாக பந்துவீசியமை காரணமாகவே சுப்பர் ஓவர் வரையில் அப்போட்டி சென்றிருந்தது.

இந்த சுற்றுப்பயணம் முழுவதும் நிரோஷன் டிக்வெல்ல மோசமாகச் செயற்பட்டிருந்த நிலையில், அவர் சதீர சமரவிக்கிரமவால் பிரதியீடு செய்யப்படும் வாய்ப்பு காணப்படுகிறது.

இதேவேளை, மறுபக்கமாக இலங்கையணிக்கெதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும் ஓட்டங்களைப் பெற்றிருக்காத றீஸா ஹென்ட்றிக்ஸ், இளம் வீரரான ஏய்டன் மார்க்ரம் ஓட்டங்களைப் பெறுகையில், உலகக் கிண்ணத்துக்கான தனது இடத்தை உறுதிப்படுத்துக் கொள்வதற்கான இறுதி வாய்ப்பொன்றாக இப்போட்டி காணப்படுகின்றது.

இதுதவிர, இன்றைய மற்றும் நாளை மறுதின போட்டிகளுக்கான தென்னாபிரிக்கக் குழாமில் இடம்பெற்றுள்ள கிறிஸ் மொறிஸ், அணியில் இடம்பெற்றால் உலகக் கிண்ணத்துக்கு முன்னால் தேர்வாளர்களுக்கு தனது திறமையை நிரூப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பொன்றாகவும் இப்போட்டி காணப்படுகின்றது.

தவிர, தென்னாபிரிக்க அணிக்கு பதில் தலைவராக கடமையாற்றவுள்ள ஜெ.பி டுமினி, உலகக் கிண்ணத்துக்கு முன்னர் தனது துடுப்பாட்டத்தையும், பந்துவீச்சையும் தான் காயத்துக்கு முன்னர் விட்ட இடத்திலேயே இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ள வாய்ப்பாகவும் இப்போட்டி காணப்படுகின்றது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *