ஒலிம்பிக் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையராக அருண தர்ஷன பதிவாகியுள்ளார்.
ஒலிம்பிக் விழாவொன்றில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் எனும் மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் விழாவில் அவர் இந்த மகத்தான ஆற்றலை வௌிப்படுத்தினார்.
ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியில் அருண தர்ஷன மூன்றாமிடத்தைப் பிடித்தார்.
போட்டியைப் பூர்த்தி செய்ய அவருக்கு 44.99 செக்கன்கள் சென்றதுடன் இதன் மூலம் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இது 400 மீற்றர் ஓட்டத்தில் அவரது அதிசிறந்த காலப்பெறுதியாகும்.
திருகோணமலை சேருநுவர தெஹிவத்த கிராமத்தில் பிறந்த அருண தர்ஷன மாத்தளை அக்குரம்பட வீர கெப்பெட்டிபொல தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.
அருணவின் ஆற்றலால் பேராந்தமடைந்த அவரது பயிற்றுநரான அசங்க ராஜகருணா அருணவை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
அருண தர்ஷன பங்கேற்கும் 400 மீற்றர் அரைஇறுதிப் போட்டி இலங்கை நேரப்படி நாளை(06) இரவு 11.05 அளவில் நடைபெறவுள்ளது.