சிலாபம், குளியாப்பிட்டி வன்முறைகள் குறித்து அமைச்சர்களான ரிஷாத், அகில ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

(UTV|COLOMBO)  சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், அகில விரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது,  இது தொடர்பில் அந்த பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அட்டகாசங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விரு அமைச்சர்களும் கொண்டுவந்தனர்.

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களில் வேண்டுமென்றே வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களின் கடைகளும் பள்ளிவாசல்களும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்பட்டிருப்பதாகவும் இதனால் அந்த பிரதேச முஸ்லிம் மக்கள் தற்போது பயத்தில் உறைந்து கிடப்பதாகவும் ஜனாதிபதியிடம் இவ்விரு அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு நிலைமைகளை கேட்டறிந்ததுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் இறுக்கமாக நிலை நாட்டுமாறும் சட்டத்தை பணிப்புரை விடுத்தார்.

இன்று இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டில் எந்த பிரதேசங்களிலும் ஏதவாது சம்பவங்கள் நடந்தால் அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபரும் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமே வகை சொல்ல வேண்டும் எனவும் இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களை பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடுத்துரைத்தார்.

இதேவேளை குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும் என  பொலிஸ் பேச்சாளர் அறிவித்தார். ஏற்கனவே சிலாபம் பிரதேசத்தில் இன்று மாலை அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *