ஆத்மீகத்தை ஆக்கிரமிக்கும் சிந்தனைச் சுதந்திரம் ?

-சுஐப்.எம்.காசிம்-

(UTVNEWS | COLOMBO) – முஸ்லிம் விவாகம்,விவாகரத்துச் சட்டம், இஸ்லாமிய ஷரீஆச்சட்டம், புர்கா,நிகாப் உள்ளிட்ட இஸ்லாத்தின் நேரடிக் கட்டளைகளுக்கு உட்பட்டுள்ள இவ்விடயங்களில் முஸ்லிம்களின் ஆத்மார்த்த நம்பிக்கைகள் வேள்வித்தீயில் புடம் போடப்படுகின்றன. இவ்விடயங்களை பிறமதத்தவர் விமர்சனம் செய்யும் நிலைமைகள்,ஒருபடி மேற்சென்று முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்தும் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளில் ஏனையோர் இலகுவாகத் தலையிடும் நிலையை ஏற்படுத்தியதே பெரும் கவலை. இவ்விடயங்களே முஸ்லிம் சமூகத்தில் பாரிய உணர்வலைகளைத் தெறிக்க வைத்துள்ளன. அவசரகாலச் சட்டத்தில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்ட புர்கா,நிகாப் போன்ற முஸ்லிம்களின் அதி சிரத்தையுடைய சமயச் சிந்தனைகளில், குறுக்கீடு செய்து குழப்பும் பௌத்தப் பேரினவாதத்துக்கு, சீர்திருத்தம் கோரும் சில முஸ்லிம் பெண்ணியவாதிகளின் போக்குகளும் கைகொடுக்கின்றன.ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறுள்ள இலங்கை முஸ்லிம்களின் வாரிசுகளின் பாதுகாப்புக் கருதி சில விடயங்களை விட்டுக் கொடுக்க முடியாதென க்கூறும் ,முஸ்லிம் சமூகப் பெரியார்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகளின் விடாப்பிடியில் நியாயங்கள் இருப்பதை நிராகரிக்க முடியாது. இதேபோன்று சீர்திருத்தம் கோரும் முஸ்லிம் பெண்களின் சிலவற்றையும் நியாயங்களிலிருந்து நிராகரிக்க இயலாதுமுள்ளது. எனினும் பெண் நீதிபதிகள், பெண்குவாசிகள், பால்நிலை சமத்துவம் கோரும் இவர்களின் நிலைப்பாடுகளை மானுட அறிவுக்குள் புகுத்தி அலசிப்பாரக்க இயலாதே! மனித அறிவுக்குப் புலப்படாத, கண்ணுக்குத் தென்படாத விடயங்களை இறைதிருப்தி,ஆத்ம திருப்திக்காக அப்படியே நம்பி, அதன்படி ஒழுகுவதே ஆத்மீக நம்பிக்கையாகும்.

விஞ்ஞானத்துடன் மல்லுக்கு நிற்கும் விடயங்களையும் இன்று மானுடம் நம்புவதாக இருந்தால் ஆத்மீக நம்பிக்கையின் பற்றுதலும் பயிற்சியுமே காரணம். இஸ்லாத்தில் பெண் தலைமைத்துவத்துக்கு இடமில்லை.இந்த அடிப்படையில் இறை தூதர்களில் எவரும் பெண்களாகவும் இல்லை. மிருதுவான குணாம்சமுடைய பெண்ணால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாதென்பதும் தாய்மையுள்ளம் தயவு, தாட்சண்யத்துக்குப் பலியாகுவதும் இறை நியதிக்குள்ளானவை. இந்தப் பின்புலத்திலே இஸ்லாம் சில விடயங்களில் பெண்களை மட்டுப்படுத்தி வைத்துள்ளது. எனவே சில சீர்திருத்தவாதிகள் கோருவதற்காக,பெண் நீதிபதிகளையும் குவாசிகளையும் நியமிப்பது ஆத்மீக நம்பிக்கைகளில் கைவைப்பதாக அமைந்து விடும் என்கின்றனர் சமயவாதிகள். இன்னும் இவ்வாறு சீர்திருத்தம் கோருவோர் அடிப்படையில் இஸ்லாமிய வரையறைகளுள்ள பெண்களாக இல்லாதுள்ளதால் இவர்களின் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தில் உதாசீனப்படுத்தப்படுகிறது. பாலியல் வியாபாரத்துக்கு அனுமதி கோரும் ஒருசில முஸ்லிம் பெண்கள் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்குப் பின்னாலுள்ளமை, இவர்களின் கோரிக்கைகளை மேலும் பலவீனப்படுத்துகின்றன. எனினும் திருமண வயதை 18 க்கு உயர்த்துமாறு இவர்கள் கோருவது நியாயத்தின் வாடைகளை பளிச்சிட வைக்கின்றன.ஒரு மனிதனின் கண்களைத் திறந்து அறிவூட்டுவது கல்வியாகும். எனவே உயர்தரம் வரை கற்கும் வரையில் எந்தப் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதை எதிர்த்தேயாக வேண்டும்.ஆனால் இப்போது இச்சிறிய வயதில் எந்தப்பெண்ணும் திருமணம் முடிப்பதாகத் தெரியவில்லை.

காலச்சக்கரத்துக்குள் சுழலும் மனித வாழ்வியலின் சமரிலிருந்து எழுவதற்கிடையில் ஆயுள் இருபது வயதை எட்டி விடுவதையே காண்கிறோம்.அதற்காக ஆரம்ப வயதுத் திருமணம் (13இலிருந்து) பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் என்ற விவாதத்தையும் ஏற்க முடியாது. இவ் விடயங்கள் ஒரு மனிதனுக்குள்ள ஆத்மீக நம்பிக்கைளின் பலம், பலவீனத்தைப் பொறுத்தவை. உலகக் கல்விக்கு இஸ்லாம் வழங்கிய மகத்துவத்தை இன்னும் பலர் புரியாதுள்ளனரோ? அல்லது புலப்படாமல் மறைத்து வைத்துள்ளனரோ? என்ற ஆராய்ச்சியையும் முஸ்லிம் புத்திஜீவிகள் வௌிச்சத்துக்கு கொணடு வரவேண்டும். இறைதூதர் முஹம்மது நபியவர்கள் வரலாற்றில் முதல் சந்தித்த “பத்ர்” யுத்தத்தில் பல எதிரிகள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.இவர்களை விடுதலை செய்ய,விதிக்கப்பட்ட நிபந்தனைகள் உலகக் கல்வியை மையப்படுத்தியதே. எழுத, வாசிக்கத் தெரிந்த கைதிகள்(எதிரிகள்) மதீனா முஸ்லிம் சிறுவர்களுக்கு கற்பித்துக் கொடுத்தால் விடுதலை வழங்கப்படுமெனக்கூறிய இறைதூதர் முஹம்மது நபியின் அறிவுத்தேடல்,ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னரே மெச்சப்பட்டது. மதீனாச் சூழலில் இஸ்லாம் பலம் பெறாத நிலையில் இவ்வாறு கைதிகளை விடுவிப்பது வளர்ந்து வரும் இஸ்லாமிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த காலத்திலும் கல்விக்காக, எதிரிகளை விடுவித்த காருண்ய நபியின் வழிகாட்டலை மேலெழுந்த வாயிலாக விமர்சிப்பதற்கு எவருக்கும் அறிவு முதிர்ச்சியில்லை. புர்காவையும், ஹிஜாபையும் கைவிடுவது காலப் போக்கில் ஏனைய விடயங்களில் கைவைப்பதற்கான துணிவை கடும்போக்கர்களுக்கு வழங்குமென்ற அச்சமும்,ஆத்மீக நம்பிக்கைகளைக் களைவது இறையச்சத்தைப் பாதிக்கும் என்ற அதிருப்தியுமே விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்காதுள்ளது.

உலகிலுள்ள முஸ்லிம் பெண்களில் எத்தனை வீதத்தினர் புர்கா,நிகாப் அணிகின்றனர், பங்களாதேஷ் உள்ளிட்ட சில நாடுகளில் புர்கா, நிகாப் தடைசெய்யப்பட்டுள்ளதுதானே,பௌத்த நாட்டில் இது எதற்கு? எனக்கேள்வி எழுப்புவோர் நிச்சயமாக முஸ்லிம்களின் பாதுகாப்பில் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.மிக நீண்டகாலமாக இவர்களுக்குள் தேங்கிக் கிடந்த வேத நிந்தனைகள், ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னர் வௌிக்கிளம்பியுள்ளதே உண்மை. ஐரோப்பாவின் அறிவியல் ரீதியான புரட்சிக்கு எந்த மதங்களும் வழிகாட்டவில்லை, மதங்களைக் கண் மூடித்தனமாகப் பின்பற்றுவதால் என்ன பயன் என்றும் இந்தப் பெண்ணியவாதிகள் விவாதிக்கின்றனர்.தனிமனித சிந்தனையில் அறிவியல் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் ஆத்மீக நம்பிக்கைகளே மிக ஆழமாக ஊடுருவுகின்றன.இதனால் மக்களின் ஆத்மீக நம்பிக்கைகளில் பிறபுத்திகளை புகுத்த முனைவது வெற்றியளிக்காது. ஐரோப்பாவை இஸ்லாத்துக்கு எதிராகக் காட்டும் சில முயற்சிக ளும் இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுப்பஞ்சத்தின் வௌிப்பாடுகள் என்பதே இப்பெண்ணியவாதிகளின் நிலைப்பாடு.இவ்விடயத்தில்தான் தடுமாற வேண்டியுள்ளது. இன்றைய நவீன உலகம் எதிர் கொள்ளும் சவால்களுக்கு சரியான பதில்களை சமயவாதிகள் வழங்கத்தயங்குவது இவர்களை இன்னும் உற்சாகப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *