ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

(UTVNEWS | COLOMBO) – இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 20 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு கடந்த வியாழக்கிழமை இந்த பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் சர்ச்சைக்குரிய நிலைமையை மாற்ற முற்படும் இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் இரத்து செய்யப்பட்டமை குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஜம்மு காஷ்மீர் முழுமையாக முடக்கப்பட்டு, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதையும், இந்த நடவடிக்கை ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதையும் ஜனாதிபதிக்கு விளக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ள பாகிஸ்தான், ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின்படி காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு அமைய இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும் என கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *