அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் நிகழ்ச்சியாக பீபி, எக்ஸான் மொபில், ஸ்குளும்பெர்கர், பேக்கர் ஹியூஸ், வின்மார் இன்டர் நேஷனல் உள்ளிட்ட 17 உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் எரிசக்தி பாதுகாப்புக்காகவும், பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகளுக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்த விவாதம் முக்கிய இடம் பிடித்தது.

இந்தியாவில் தங்களது காலடித் தடங்களை மேம்படுத்துவது பற்றி விவாதித்த எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்த துறையில் இந்தியா கட்டுப்பாடு களை தளர்த்தி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டினர்.

இந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடி முன்னிலையில் அமெரிக்காவின் டெல்லூரியன் நிறுவனத்துடன் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி), பங்கு முதலீடுகள் வாயிலாக இறக்குமதி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

40 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி.) டெல்லூரியன் நிறுவனம், இந்தியாவுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இறுதி ஒப்பந்தம், அடுத்த வருட மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *