பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவேன் – சஜித்

(UTV|COLOMBO) – தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய் வேதனத்தை உயர்த்தி நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம் நேற்று(20) கொத்மலை நகர மைதானத்தில் நடைபெற்றது.

சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்ததாவது,

“.. மறைந்த தலைவர் காமினி திசாநாயக்கவின் பிறந்த தினத்தில் கொத்மலை நகரில் மக்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். காமினி திசாநாயக்க அவர்களின் புதல்வர்களான நவீன் திசாநாயக்க, மயந்த திசாநாயக்க ஆகியோரின் ஆதரவுடன் பலம்மிக்க புதிய நாட்டை உருவாக்குவேன்.

இன்று நாட்டுக்கு தேவை எறும்பை போல் பயணித்து நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க கூடிய தலைவராக செயற்படுவதே. எனக்கு வயது 52. நவீன் திசாநாயக்கவின் வயது 50. நாங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்கக் கூடிய ஆட்டம் இழக்காதவர்களாக இருக்கின்றோம். சிலர் 80வயதை எட்டியுள்ளனர். அவர்கள் தாமாகவே வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

நாட்டை புதிய பாதையில் கொண்டு சென்று அபிவிருத்தி செய்வதற்கான வயது எம்மிடம் உண்டு. காலாவதியாகியவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக போட்டி போடுவது அர்த்தம் இல்லை.

பொதுமக்களின் சக்தியினைக் கொண்டுபுதிய ஒரு நாட்டினை உருவாக்குவேன். தேயிலை தொழிலை முன்னெடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாதாந்தம் 14,000ரூபாவை சம்பளமாக பெறுகின்றனர். அப்படியென்றால் நாளொன்றுக்கு 700ரூபாவை பெறுகின்றனர்.

ஆனால் 4பேர் வசிக்கும் ஒரு குடும்பத்தில் 50தொடக்கம் 55000ரூபா வரை அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல தேவைப்படுவதாக புள்ளி விபரம் கூறுகிறது.

இந்த நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை வழி நடத்தும் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் சார்பாக நாளொன்றுக்கு 1500ரூபாவை சம்பளமாக வழங்க உறுதி வழங்குகின்றேன். இன்று 350ரூபாய்க்கு உரம் வழங்குவதாக எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் விவசாயிகளை வெவ்வேறாக பிரிக்காது அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகவே உரங்களை வழங்குவேன்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *