இந்தியா- நியூசிலாந்து : முதல் ஆட்டம் மழையால் பாதிப்பு

(UTV|நியூசிலாந்து) – இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் இடைநடுவே நிறுத்தப்பட்டது.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தல‍ைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் ஒருநாள், இருபதுக்கு – 20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு – 20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணியும் கைப்பற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் உள்ள பாசின் ரிசர்வ் மைதானத்தில் இன்று ஆரம்பமானது

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியல் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணியில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர். இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது.

அதன்படி பிரித்வி ஷா 16 ஓட்டங்களில் வெளியேறினார். 3 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா 11 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். விராட் கோலி 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஓரளவு தாக்குப் பிடித்த ஆரம்ப வீரர் மயங்க் அகர்வாலும் 34 ஓட்டங்களுடன் டிரெண்ட் போல்டின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.

அப்போது ஆடுகளத்தில் களத்தில் ரகானே 38 ஓட்டங்களுடனும் ரிஷாப் பாந்த் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். மழை விட்ட போதும் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், தொடர்ந்து போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, முதல் நாள் ஆட்டம் இடைநடுவிலேயே நிறைவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *