முஸ்லிம் காங்கிரஸ் – மக்கள் காங்கிரஸ் இணைந்து பொதுச்சின்னத்தில் களமிறங்க முடிவு [VIDEO]

(UTV|புத்தளம்) – புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இரவு (11) மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறை தொடர்பில், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில், பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறித்த பேச்சு வார்த்தையின்போது பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென்ற முடிவு எடுக்கப்பட்டதுடன், வேட்பாளர்கள் ஒதுக்கீடு தொடர்பில், இருதரப்பும் கலந்துபேசி முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இரண்டு கட்சித் தலைவர்களுடன் மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, மு.காவின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் முதல் அரைவாசிக் காலத்தை, புத்தளத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதியும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான நவவிக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *