(UTV|கொழும்பு ) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
குறித்த போதகர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
மேலும் அவர் நடத்திய ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.