ஒலிம்பிக் 2021 இரத்தாக அதிக வாய்ப்பு

(UTV – ஜப்பான்) -கொரோனா வைரஸ் தொற்றால் எதிர்வரும் 2021 ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளதாகவும்,. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் போட்டி இரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாமஸ் பேக் கூறுகையில்;

‘‘ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021-ல் கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3,000 பேர் அல்லது 5,000 பேரை பணியில் வைத்திருக்க முடியாது. மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது. விளையாட்டு வீரர்களை நிச்சயமற்ற நிலையில் வைத்திருக்க முடியாது.

மாறுபட்ட சூழ்நிலைகள் உள்ளன. அதை அடையாளம் காண்பது மிகவும் எளிது அல்ல. உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 23 -ந்திகதிக்குள் எப்படி இயங்கப்போகிறது என்பது குறித்து தெளிவான பார்வை கிடைத்த பின்னர்தான், பொருத்தமான முடிவு எடுக்கப்படும்’’ எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *