பிரதமரின் பொசொன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஷேட செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார்.

குறித்த செய்தி பின்வருமாறு,

தேசத்தை நாகரீகமடையச் செய்த, தேசத்தை முதிர்ச்சியடையச் செய்த, தேசத்தை முன்னேற்றிய, தேசத்தைப் பாதுகாத்த புத்தமதத்திற்கு அடிப்படையாக அமைந்த புனித பொசொன் நோன்மதி தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது.

இந்தியாவின் அசோகப் பேரரசரின் ஆசிர்வாதத்துடன் வருகை தந்த மகிந்த தேரர் தலைமையிலான தர்ம தூதுக் குழுவினர், அன்று மிகிந்தலையின் அம்பஸ்தலயவிலிருந்து இரண்டாவது பேதிஸ் அரசருக்குப் பரிசளித்த புனித மதம் கங்கை போன்று குறுகிய காலத்தில் இந்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவிச் சென்றது.

இந்த தர்மவிஜய செய்தியுடன் அறியாமையினால் மங்கலடைந்து போயிருந்த சிங்கள தீபம் சத்தியத் தத்துவம் காரணமாக பிரகாசம் பெற்று ஒளி வீசத் தொடங்கியது. அதன் மூலம் குறுகிய காலத்தில் தூய கலாசாரத்தினையும், பண்பாட்டினையும் கொண்ட நாகரீகமடைந்த தேசமாக மாற்றமடைந்தது. அதன் பிரதிபலனாக இந்நாட்டினை ஒற்றுமைப்படுத்திய சிரேஷ்ட இளவரசர்கள், தீரமிகு தளபதிகள், காட்டிலிருந்த பாரிய கருங்கல்லில் அன்பு, கருணை, மன அமைதி போன்ற உயர்ந்த பண்புகளையும் சேர்த்துச் செதுக்கிய வியப்பூட்டும் கலைஞர்கள், இயற்கையின் அழகினை சொற்களில் வடித்த கவிஞர்கள் போன்றோர் இந்நாட்டினை செழுமைப்படுத்தினர்.

இம்முறை பொசொனின் பிறப்புடன் உலக சுற்றாடல் தினமும் அதே தினத்தில் கொண்டாடப்படுகிறது. எமது மூதாதையரின் முழு உடம்பிலும் ஒன்றித்துப் போயிருந்த இந்த சிரேஷ்ட தத்துவம் காரணமாக உயிரினங்கள் உட்பட இயற்கையின் அனைத்து அம்சங்கள் மீதும் நிதமும் அன்பு செலுத்தி, அவற்றைப் பாதுகாக்கின்ற பலமான தேசமொன்று தோற்றம் பெற்றது.

இன்று அதற்கு மாற்றமாக நடந்துகொண்டமையினால் முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும் என்பதே கோவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும். நாமனைவரும் நாடு என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும், புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளினைப் பின்பற்றியமையினாலும் இலங்கை அத்தொற்றுநோயை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது. இன்னும் சிறிய காலப்பகுதிக்கு சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நாமனைவரும் செயற்பட வேண்டியுள்ளது.

அதன் மூலம் இத்தொற்றினை முழுமையாகத் தோற்கடித்து, நாடு என்ற வகையிலும், நாட்டு மக்கள் என்ற வகையிலும் முன்னோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறேன். எனவே உயரிய பண்புகளுடன், அனைவருக்கும் அன்பு, கருணை காட்டி இத்தொற்றினை வெற்றிகொள்ள உறுதி பூணுவோம்.

அனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *