(UTV|கொழும்பு)- “சதொச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் கொள்ளளவானது, 52 நாள் அரசாங்க காலத்தின்போது குறைந்திருந்தமை தொடர்பில், எனது வேண்டுகோளின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே, நேற்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விளக்கமளித்தேன்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஊடகவியலாளரிடம் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“2018 டிசம்பர் 20 ஆம் திகதி மீண்டும் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், எனது அமைச்சின் கீழான சதொச நிறுவனத்தின் தலைவர், 52 நாள் ஆட்சிக் காலத்திலே களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசி களவுபோயுள்ளதாக தெரிவித்தார்.
எனவேதான், இந்த முறைகேடு தொடர்பாக உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கையை பெற்று, அந்த அறிக்கையை அரசாங்க பொதுக் கணக்காய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறும், களவு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்யுமாறும், நான் அதிகாரிகளை பணித்தேன். அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே என்னிடம், இது தொடர்பிலான விளக்கத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பெற்றுக்கொண்டனர்” என்றார்.
– ஊடகப்பிரிவு –