ஐக்கியமும் இறை பிரார்த்தனையுமே சதிகாரர்களை தோற்கடிக்க சரியான மார்க்கம்

(UTV|கொழும்பு) – 19 வருட அரசியல் பணியில் வெறுமனே அபிவிருத்திச் செயற்பாடுகள் மாத்திரமின்றி, சமூகம் சார்ந்த விடயங்களில் சாத்தியமானவற்றை சாதித்திருக்கின்றோமென்ற மன நிறைவுடன் தொடர்ந்தும் பயணிப்பதாக என்ற முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில், தொலைபேசி சின்னத்தில், முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று (29) வவுனியா மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“இந்த அரசியல் பயணத்தை ஒரு சமூகப் பயணமாகக் கொண்டே பணியாற்றி வந்தோம். இப்போதும் அந்த உணர்வுதான் இருக்கின்றது. நாளுக்குநாள் கெடுபிடிகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. இன்று என்ன நடக்கும், நாளை எது நடக்கும்? என்று எதுவுமே தெரியாத நிலையில், உங்கள் முன் நிற்கின்றோம். நீங்கள் எனக்குக் காட்டுகின்ற அன்பும் ஆதரவுமே மன ஆறுதலைத் தருகின்றது. உங்களின் நிம்மதியும், சந்தோசமும், சிறந்த எதிர்காலமுமே எமது நோக்கமாக இருக்கின்றன. 19 வருட அரசியல் வாழ்வை நிறைவு செய்துள்ள நாம், சமூகத்துக்காக நிறையவே செய்திருக்கின்றோம் என்ற திருப்தி இருக்கின்ற போதும், இனியும் செய்ய வேண்டியவர்களாகவே உள்ளோம்.

எமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்த வேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், எம்மீதான நெருக்குதல்களும் சீண்டுதல்களும் உச்சளவுக்கு வந்துள்ளன. துரத்தி துரத்தி துன்புறுத்துகின்றார்கள். வேண்டுமென்றே தண்டிக்கின்றார்கள். சமுதாய நோக்கில் உழைத்ததற்காக, குரல் கொடுத்ததற்காக எல்லாத் திக்கிலுமிருந்து, சரமாரியான தாக்குதல்களை சந்திக்க வேண்டியுள்ளது. கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து, உள்ளத்தை நோகடிக்கின்றார்கள்.

இந்தக் காலகட்டத்தில்தான் நீங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. சிறிய சிறிய சச்சரவுகளையும் பிரச்சினைகளையும் தூக்கி வீசிவிட்டு, ஓரணியில் இணையுங்கள். சதிகாரர்களை தோற்கடிப்பதற்கு இதுதான் சிறந்த வழி. தேர்தல் முடிவுகள் தேசத்துக்கு நமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும். சர்வதேசத்துக்கு பறைசாற்ற வேண்டும். நமது வாக்குகளை சீரழித்துவிட்டால் அவர்களது திட்டங்கள் வெற்றியடையும்.

ஐக்கியமும் பிரார்த்தனையும்தான் சதிகாரர்களை தோற்கடிக்க சரியான மார்க்கமாகும். நாம் பிரிந்து செயற்பட்டால் சமுதாயத்துக்கு நிரந்தரமான துன்பமாக அது மாறி, நமது முதுகிலே அடிமைச்சாசனம் எழுதும் நிலையையே உருவாக்கும்” என்றார்.

– ஊடகப்பிரிவு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *