எதிர்நீச்சலுடன் சுழியோடியே சமூக அபிலாஷைகளை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம்..!

(UTV|கொழும்பு) – கடும்போக்குவாதம் உயிர்வாழும் வரை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள், எதிர்நீச்சலுடன் சுழியோடியே தமது சமூக அபிலாஷைகள், அடையாளங்களை அடைய வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில், தனிப் பெரும்பான்மை தலையெடுப்பதும், இன்னொரு சமூகத்துக்கான அபிவிருத்திகளையும் உரிமைகளையும் இனச்சாயம் பூசி தடுப்பதும் நிலைக்கும் வரை, இன இணக்கங்கள் துருவங்களாகவே தென்படப்போகின்றன.

தாம் சார்ந்த சமூகத்துக்கு எதையும் செய்யாத சில மக்கள் பிரதிநிதிகள், இன்னொரு சமூகத்தின் தலைவன் எதையாவது சாதிப்பதை பொறுத்துப்போகும் பக்குவத்தின் அடித்தளத்திலிருந்தே நல்லிணக்கம் சாத்தியப்படும். ஆனால், இப்பக்குவம் எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. தலைமைகள், கட்சிகளுக்கிடையில் இன்று ஏற்பட்டுள்ள தன்மானப் போட்டிகள், குரோதங்கள், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்க்கவிடாது குறுக்காக நிற்கின்றன. வடக்கில் கால்பதித்து கிழக்கு, மேற்கு, மத்தி வரை வெளிச்சம்போடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைக்கு, இந்த தலைவிதி பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சியின் இரண்டு தசாப்த அரசியலில், கடந்த ஐந்து வருடங்கள் மிகப்பெரும் சோதனைக்களமாக காட்சியளிக்கின்றது. எதற்கெடுத்தாலும், மக்கள் காங்கிரஸின் தலைமையே குறிவைக்கப்படுகின்றது. வில்பத்து காடழிப்புஎன்ற கோஷம் மற்றும் அகதி மக்களின் மீள்குடியேற்றம், சதொச பிரச்சினை என அனைத்தும் இனவாதிகளால் அணுவணுவாக அவதானிக்கப்படுகின்றது. இது ஏன்? என்ற கேள்விக்கு விடையில்லாத வெறுமையே வடபுல மக்களை, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்குப் பின்னால் அணிதிரள வைக்கின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்தவரை, இனவாதிகளின் இவ்வாறான எதிர்க்கணைகளும், கடும்போக்கு கட்சிகளின் கற்பனைக் கதைகளும், கோடரிக்காம்புகளின் காட்டிக்கொடுப்புக்களும் ரிஷாட் பதியுதீனை புடம்போட்டு கெட்டிப்படுத்துகின்றன. பனை மரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும், கள்ளு குடிப்பதாகவே கூப்பாடு போடுகின்றனர். சமூகத்துக்குப் பணியாற்றும் யதார்த்தங்களை மறந்துதான், இனவாதம் மக்கள் காங்கிரஸின் தலைமையை கொய்யப்பார்க்கின்றது. கெரில்லா போரில் அப்பாவிகள் வீழ்த்தப்படுவது போன்று, எதையாவது சொல்லி, தலைமையை அழித்து, சமூகத்துக்கான எல்லாவற்றையும் நிறுத்துவதில், கடும்போக்குவாதம் கனக்கச்சிதமாக செயற்படுகின்றது. அதன்மூலம், சிறுபான்மைச் சமூகத்தின் அடையாளத்தை அழிக்கப்பார்க்கின்றனர்.

சாதாரண வயிற்றுப்பசியில் ஆயுளை இழக்கும் பரம ஏழைகளுக்கு, அடிப்படை வாழ்க்கை வசதிகளை அமைத்துக் கொடுப்பதே மக்கள் காங்கிரஸின் முதல்பார்வை. இதற்காக ஆயுளின் எல்லை வரை ரிஷாட் பதியுதீன் முழுமூச்சுடன் உழைக்கின்றார்.

உறவுகளை இழந்து, உடமைகளைப் பறிகொடுத்து, இருப்பிடங்களை கைவிட்டு வெளியேறிய வடபுல மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில், அவர் ஆற்றிய பணிகள் காலத்தால் அழிக்க முடியாதவை. போரின் பாரிய படுகுழிகளில் வீழ்ந்து மீண்டெழும் சமூகத்தின் அபிலாஷைகளை, போர்ப்புலத்தில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வரும் ரிஷாட் பதியுதீனாலேயே உணர முடியுமென்ற நம்பிக்கை, இம்மக்களிடம் இன்னும் வற்றிப்போகவில்லை. இந்த நம்பிக்கை மீதான மற்றொரு வேட்டையே இன்னுமொரு வடிவத்தில் ஏவியுள்ளது இனவாதம்.

இஸ்ஸதீன் கபூர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *