அங்கொட லொக்காவின் கொலை – இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை

(UTV | இந்தியா) – நாட்டின் பாதாள உலகத் தலைவனாக இனங்காணப்பட்ட அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேரா இந்தியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்களை மேற்கோள்காட்டி சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும், அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டுள்ளதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவிக்கையில், அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்படும் தகவலானது, அவர் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு நாட்டுக்கு வருகை தருவதற்கான முயற்சியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இன்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“…. பெங்களுரில் வைத்து, அங்கொட லொக்காவின் உடலில் ஒருவகையான விஷம் செலுத்தப்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல குற்றச் செயல்கள் தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் பரவி வருகின்றது. எனினும், அதனை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலான தகவல்கள் இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை…” எனத் தெரிவித்திருந்தார்.

களுத்துறை – எதனமடல பகுதியில் சிறைச்சாலை பேருந்தில் வைத்து ரணாலே சமயங் என்ற திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குழுவின் தலைவர் உள்ளிட்டவர்களை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும் கொலைகள், கொள்ளைகள், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றங்களுடன் தொடர்புபட்டவரே அங்கொட லொக்கா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலத்தில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குற்றத்திற்காக அந்த நாட்டில் வைத்து அங்கொட லொக்கா கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாரிய குற்றங்களில் ஈடுபட்டு தற்போது வெளிநாடுகளில் தங்கியுள்ள திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் மற்றும் சிவப்பு அறிவித்தலை பெறுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *