(UTV|கொழும்பு) – அரசியல் ரீதியாக பிரிந்திருந்ததனாலும் ஒற்றுமையீனத்தினாலுமே புத்தளத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் நமக்கு எட்டாக்கனியாகியதாகவும், இம்முறை எப்படியாவது அது கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின், தராசுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான அலி சப்ரி ரஹீம், ஆப்தீன் எஹியா, முஸம்மில் ஆகியோரை ஆதரித்து, புத்தளத்தில் நேற்று மாலை (30) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அவர் மேலும் கூறியதாவது,
“புத்தளத்தில் பொதுத் தேர்தலில், பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று பல்வேறு தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டதை நீங்கள் அறிவீர்கள். கடந்த பொதுத் தேர்தலில் நமக்குப் பிரதிநிதித்துவம் கிட்டாததனால் அதனை அனுபவமாகவும் படிப்பினையாகவும் கொண்டு, எமது இந்த முயற்சி அன்றே கருக்கட்டியது.
புத்தளத்தை தளமாகக் கொண்டு பணியாற்றும் கட்சிகளினதும், அமைப்புக்களினதும் பள்ளிவாசல் தர்மகர்த்தா சபை மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோருடன் தொடர்ச்சியாக நாம் கலந்துரையாடியிருக்கின்றோம். எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் பல அரசியலவாதிகளின் வீடு, வாசலுக்குச் சென்று, பலமுறை பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கின்றனர். தூய்மையான எண்ணத்துடன் மேற்கொண்ட முயற்சிகளினால் அனைவரையும் ஓரணியில், பொதுச் சின்னத்தில் போட்டியிட இறைவன் உதவி செய்தான். எமது கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்களான அலி சப்ரி, ஆப்தீன் எஹியா போன்றவர்கள் இந்தப் பணியில் முதன்மை வகித்துள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் நவவி ஹாஜியார், பைரூஸ், நஸ்மி ஆகியோர் ஒரே கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட போதும், சில ஆயிரம் வாக்குகளால் நவவி ஹாஜியார் வெற்றி வாய்ப்பை இழந்தார். மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, அந்தத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருந்த போதும், “நவவி ஹாஜியாருக்கு அந்த சந்தர்ப்பத்தை, நமது கட்சியின் சார்பில் வழங்குவோம்” என நாம் கோரிய போது, பெருமனதுடன் ஏற்றுக்கொண்டு, அவரை வெல்ல வைப்பதற்கு அயராது உழைத்தார். இந்தப் பணியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவின் பங்களிப்புக்களும் நிறைய உண்டு.
புத்தளத்து அரசியலில் நாம் குறிப்பிடக் கூடிய அளவுக்கு கால் பதிக்காவிட்டாலும், இந்தப் பிரதேச மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்றிருக்கின்றோம். புத்தளத்தில் பல அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம். எனினும், கடந்த நகரசபை தேர்தலில் எமக்கு எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. இம்முறை இந்தப் பொதுக் கூட்டமைப்பை உருவாக்குவதில் அலி சப்ரி மற்றும் ஆப்தீன் எஹியா ஆகியோர் பெரும்பங்கு வகித்தனர் என்பதை, நான் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
புத்தளத் தேர்தல் தொகுதி, மூன்று தசாப்தகாலம் பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கின்றது. தேசியக் கட்சிகள் என்றும் சுயேச்சைக் குழுக்கள் என்றும் பிரிந்து நின்றதனாலேயே, இந்தச் சமுதாயம் அரசியல் அநாதையானது. இதனால், இந்தப் பிரதேசம் கவனிப்பாரற்றுப் போனது. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் யாரும் இல்லாத நிலைமை ஏற்பட்டது. நமக்குக் கிடைக்க வேண்டிய வளங்களும் சேவைகளும் முறையாக கிடைக்கவில்லை. கல்வி ரீதியிலும் பல்வேறு பின்னடைவுகளை நாம் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இதைவிட அனல் மின்சார நிலையம், சீமெந்து தொழிற்சாலை ஆகியவற்றினால் சூழல் மாசடைந்து, மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக குப்பை பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தப் பிரதேச மக்கள், இதனைத் தடுப்பதற்கு பல்வேறு போராட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்ட போதும், எதுவுமே வெற்றியளிக்கவில்லை.
எனவே, புத்தளத் தொகுதிக்கு சிறுபான்மை சமூகம் சார்பாக, ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் இந்த முயற்சி கைகூட வேண்டுமென நாம் பிரார்த்திப்போம். அதற்காக ஒற்றுமைப்பட்டு வாக்களிப்போம். அடுத்த தலைமுறைக்கு இவ்வாறான பிரச்சினைகளை விட்டுச் செல்ல நாம் இடமளிக்கவே கூடாது.
புத்தளம் மக்கள் மீது மக்கள் காங்கிரஸ் நேசம் வைத்துள்ளது. எனவேதான், எமக்குக் கிடைத்த தேசியப் பட்டியலை பல்வேறு தடைகளுக்கு மத்தியில், நவவி ஹாஜியாருக்கு வழங்கி, இந்தப் பிரதேச மக்களை கௌரவித்தோம்.
ஆகையால், எமது கட்சியின் சார்பாக போட்டியிடும் அலி சப்ரி, ஆப்தீன் எஹியா, முஸம்மில் ஆகியோருக்கு உங்கள் விருப்பு வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
ஊடகப்பிரிவு-