குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் – ஹகீம் தரப்பு மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைய முயற்சிக்கின்றது என்ற செய்தியொன்றினை கடந்த வாரம் தமிழ் வார பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்தது.

குறித்த தகவல் தொடர்பில் குறித்த வார பத்திரிகையின் ஆசிரியர் சிவராஜா தனது முகநூல் பதிவொன்றின் மூலம் குறித்த செய்தியின் உண்மைத் தன்மையினையும் மேலதிக விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த விளக்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இனது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமரை சந்தித்து இது தொடர்பில் பேசியதாகவும் அதனை பிரதமரிடமே தான் கேட்டு உறுதி செய்து கொண்டுள்ளதாகவும். அடுத்த அமைச்சரவை சீரமைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இனது இருவர் பதவியேற்க உள்ளதாகவும் சிவராஜா தனது பதிவின் மூலம் மேலதிக தகவல் தெரிவித்துள்ளார்.

சிவராஜாவின் முகநூல் பதிவில் இவ்வாறு இருந்தது;

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமரை சந்தித்ததாக கடந்த ஞாயிறு ‘தமிழன்’ வாரவெளியீட்டில் வந்த தலைப்புச் செய்தி தவறானது என்று கூறுபவர்களுக்கான பதிவு இது…

* அரசில் சேருவதற்கான உரிமையும் சுதந்திரமும் அந்தக் கட்சிக்கு உள்ளது. அதை சரியென்றோ தவறென்றோ நாங்கள் செய்தியில் கூறவில்லை.

* சம்பந்தப்பட்ட எம். பி பிரதமரை சந்தித்துப் பேசியமை… என்ன பேசினார்…? என்ற விடயங்களை பிரதமரிடம் நேரடியாக கேட்டறிந்த பின்னரே அந்த செய்தியை எழுதினேன்… அந்த கோரிக்கையை ஏற்பதும் ஏற்காததும் பிரதமர் மற்றும் அரசின் முடிவு… ஆனால் ஆளுங்கட்சியுடன் இணைந்து பணியாற்ற மு. கா தயார் என்ற செய்தி அங்கு சொல்லப்பட்டது உண்மை…

* அரசியல் கட்சிகளிடம் மாதாந்த சம்பளம் மஞ்சள் கவர்களில் வாங்கி அவர்களை போற்றி அல்லது அவர்களது எதிரிகளை தூற்றி எழுதும் ஊடகவியல் எங்களிடம் இல்லை… ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நாங்கள் அவர்களின் எம். பி யொருவர் பிரதமரை சந்தித்துப் பேசினார் என்ற செய்தியை ஏன் வெளியிடாமல் இருக்க வேண்டும்?

* ஐந்து வருடம் எதிர்க்கட்சியில் இருந்து மக்களுக்கு என்ன செய்வது ? அதனால் அரசுடன் இணையலாம் என்று பிரதமரை சந்திக்க வந்த எம். பி, கட்சி மேலிடத்திற்கு சொல்லாமல் வந்திருப்பார் என்பதை என்னால் நம்ப முடியாது…

* பொய்ச் செய்திகளை இட்டு பத்திரிகை விற்பனை செய்யும் அளவுக்கு நாங்கள் தாழ்ந்துவிடவில்லை… தாழ்ந்துவிடவும் மாட்டோம்… எங்களுடன் இருந்தவர்களுக்கு – இருப்பவர்களுக்கு அது தெரியும்…

ஆனால் கட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அவர்களை போல எங்களையும் நினைத்துவிடக் கூடாது…

சரி… இவ்வளவு சொல்கிறீர்களே… அந்த ஒரு எம்பி யார் என்று சொல்லிவிடலாமே… என்று நீங்கள் கேட்கலாம்…

ஒருவர் அல்ல… அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பில் இருவர் பதவியேற்கும் படங்களுடன் விபரங்கள் சொல்வேன்…

காத்திருங்கள்…!

எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவானது;

https://www.facebook.com/sivarajah.ramasamy/posts/751774128911450

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *