ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கை

(UTV|கொழும்பு)- அநியாயமான குற்றச்சாட்டுக்களின் பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காரின் விடயத்தில் தலையீடு செய்து, அவருக்கு நீதி பெற்றுக் கொடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்துமூல வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பேருவளை, தர்கா நகரில், கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹஷீப் மரிக்காரின் விடுதலை குறித்தே, அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினரான ஹஷீப் மரிக்கார், பேருவளை, அதிகாரிகொட பள்ளிக்கு எதிரே இடம்பெற்ற வடிகான் துப்புரவு பணிகளின் போது, ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்தே, மக்கள் பிரதிநிதி என்ற வகையில், அவர் அங்கு சென்றுள்ளார். பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்தப் துப்புரவாக்கும் பணிகளின் போது, முச்சக்கரவண்டி சாரதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சினையை அடுத்து, குறித்த இடத்துக்கு வந்த விஷேட அதிரடிப் படையினர், இந்த விவகாரங்களில் தலையிட்டது மாத்திரமின்றி, பொலிஸாரின் உதவியுடன் பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காரை கைது செய்தனர். பின்னர், களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், பதில் நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டார்.

பொலிஸாரின் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை அடுத்து, இரண்டு நாட்கள் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் முடிவடைந்த பின்னர், மீண்டும் நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, பிணை வழங்க பொலிஸார் மறுத்துள்ளனர். ஆகவே, இந்த விடயம் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம் என நான் அச்சப்படுகின்றேன்.

எனவே, இந்த விடயத்தில் நீங்கள் தலையிடுவதுடன், முறையான விசாரணைகள் ஊடாக நீதி வழங்குமாறு, இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் பொலிஸ்மா அதிபரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-ஊடகப்பிரிவு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *