(UDHAYAM, COLOMBO) -மாணிக்கமேடு தீகவாபி புனிதப் பகுதியில் காணி அனுமதிப் பத்திரத்தை வைத்துள்ளவர்களுக்கு அதனைச் சுருட்டிக்ககொண்டு வெளியேறுமாறு கூறுங்கள் எனவும், பொலிஸாரின் உதவியுடன் விகாரைக்கான கட்டடம் அமைக்கும் பணியை முன்னெடுக்குமாறும் பொதுபல சேனா செயலாளர் நாயகம் கலகொட அத்தேஞானசார தேரர் அம்பாறை மாவட்ட செயலாளருக்கு உத்தரவிட்டார்.
தீகவாபி புனிதப் பிரதேசம் எனக் கூறப்படும் மாணிக்கமடு பகுதியிலுள்ள இரு நிலப் பகுதிகளை முஸ்லிம்கள் சட்டவிரோதமாக தங்களது பெயருக்கு எழுதிக்கொண்டுள்ளதாகவும், அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
இவ்வாறு முஸ்லிம்களின் பெயரில் காணி உறுதியுள்ள மாணிக்கமேடு பகுதியில் உள்ள காணியில், பௌத்த விகாரைக்குரிய கட்டடமொன்றை நிர்மாணிக்க கடந்த வாரம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அந்த காணி உறுதியுள்ள முஸ்லிம்கள் நியாயமான முறையில் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடாத்தினர். இதனால் இந்த நடவடிக்கை ஒருவாரத்துக்கு பிற்போடப்பட்டது.
இந்த நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு தெரிவித்து, நேற்று (25) தீவிரவாத பௌத்த அமைப்பான பொதுபல சேனா அம்பாறை மாவட்ட செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியது. இதன்போதே ஞானசார தேரர் காரமான முறையில் மாவட்ட செயலாளருக்கு கட்டளையிட்டார்.
பணத்தைக் கொடுத்து காணி உறுதிகளை செய்து கொண்டுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முடியாதளவுக்கு தாங்கள் சிறுபிள்ளைகள் அல்லவெனவும், எந்தவொரு அதிகாரத்துக்கும் பயப்படத் தேவையில்லையெனவும் பொலிஸாரின் உதவியைக் கொண்டு உடனடியாக கட்டிடப் பணிகளை ஆரம்பிக்குமாறும் ஞானசார தேரர் மேலும் மாவட்ட செயலாளருக்கு உத்தரவிட்டார்.