மாதுறு ஓயாவின் வலது கரைப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடு ஆரம்பம் -ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – பாரிய நீர்ப்பாசனத் திட்டமான மாதுறு ஓயாவின் வலது கரைப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடு இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரலகங்வில விலயாய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒரு இலட்சம் மகாவலி காணி உறுதிகள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

[accordion][acc title=”ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,”][/acc][/accordion]

நாட்டின் நீர்ப்பாசன மற்றும் விவசாயத்துறையின் அபிவிருத்தியின் பொருட்டு பாரிய செயற்திட்டங்கள் அரசினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மற்றுமொரு பாரிய நீர்ப்பாசனத் திட்டமான மாதுறு ஓயாவின் வலது கரைப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடு இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும்.

அத்துடன் அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் காணப்படும் 600 குளங்களை புனரமைக்கும் செயற்திட்டமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இவ்வருடத்தில் செயற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ரஜரட்ட மக்களின் நீண்டகால வேண்டுகோளான மொரகஹகந்த செயற்திட்டத்தின் ஊடாக அவர்களது நீர் பிரச்சினைக்கு தற்போது தீர்வு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் பெரும்போகத்தின்போது நீர்த்தேக்கம் பூரணமாக நீரினால் நிரப்பப்பட்டதன் பின்னர் மீண்டும் ரஜரட்ட மக்கள் நீர் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கடந்த அரசாங்கத்தின்போது அபிவிருத்தியாக காட்சிப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் பற்றி பேசப்பட்டபோதிலும் அவற்றின் கடன் சுமை தற்போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.

நாட்டை வெளிநாட்டுக் கடன்களிலிருந்து மீட்டு அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு இன்று அரசாங்கம் விரிவான அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றதெனக் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

எத்தகைய சவால்கள் காணப்பட்டாலும் அபிவிருத்தி செயற்பாடுகளை வலுவாகவும் துரிதமாகவும் முன்னோக்கி கொண்டு சென்று மக்களுக்கு தேவையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் பலவீனமாக காணப்படுகின்றதெனக் கூறிக்கொண்டு ஆட்சியமைக்க சிலர் கனவு காண்கின்றனர். கடந்த காலத்தில் காலி முகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் பின்னர் ஆட்சியை அமைக்க கனவு கண்டாலும் மைதானத்திற்கு பஸ்களில் கொண்டுவரப்பட்ட மக்கள் கூட்டத்தை வைத்து அரசாங்கத்தை அமைக்கலாம் எனக் கனவு காண்பார்களாயின் அது வேடிக்கைக்குரிய விடயமாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகைதரும் வேளையில் கறுப்புக் கொடிகளை ஏந்துவோமென தெரிவித்த சிலர் நள்ளிரவில் சென்று அவரை சந்தித்தனர் என்ற விடயமும் தனக்கு அறியக் கிடைத்த்தென்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மகாவெலி பிரதேசவாசிகளின் உரிமையை உறுதிப்படுத்தி ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் மகாவலி பீ மற்றும் சீ வலயங்களை சேர்ந்த மக்களுக்கு பத்தாயிரம் காணி உறுதிகள் இன்று ஜனாதிபதி தலைமையில் வழங்கப்பட்டன.

2017 வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதேச செயலக பிரிவுகள் சிலவற்றை உள்ளடங்கிய வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான உபகரணங்களும் , பாடசாலை மற்றும் விகாரைகளுக்கான எதிர் பிரசாரன நீர் சுத்திகரிப்பு தொகுதிகளும், நீர்த்தாங்கிகளும் இதன்போது வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் ஊவா மாகாண ஆளுநர் எம்.பீ. ஜயசிங்க, அமைச்சர் தயா கமகே, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பிரதி அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாந்து புள்ளே, முன்னாள் அமைச்சர் பீ. தயாரத்ன, வட மத்திய மாகாண சபையின் உறுப்பினர் சம்பத் ஸ்ரீ நிஷங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *