புல்மோட்டை கிராம மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு!

(UTV | கொழும்பு) –

புல்மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும் இணைந்து புல்மோட்டை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக அத்துமீறி அபகரித்து, அங்கே டோசர் இயந்திரங்களை கொண்டு அபகரிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக புல்மோட்டை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை புல்மோட்டை பகுதியில் உள்ள புல்மோட்டை இல 01 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 06 முஸ்லிம் குடும்பங்களுக்கு சொந்தமான விவசாய காணிகளை அபகரித்து, டோசர் இயந்திரங்களை கொண்டு அபகரிக்கும் நடவடிக்கைகளில் குறித்த பிக்கு ஈடுபட்டுள்ளார். இதனையறிந்த காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் சென்று அத்துமீறல், அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் காணிக்கான ஆவணங்கள் தம்மிடம் உள்ளன என்றும் பாரம்பரியமாக தாம் விவசாயம் செய்துவரும் நிலங்களை விட்டு வெளியேறுமாறும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன்போது டோசர் இயந்திரத்தோடு அப்பகுதிக்கு வந்து அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரிசிமலை பௌத்த பிக்கு பனாமுரே திலகவங்ச இந்த பகுதி பௌத்த விகாரைக்கு சொந்தமான பகுதி என்று தெரிவித்ததோடு, இந்த காணி வர்த்தமானியில் பௌத்த விகாரைக்கான இடம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அவ்வேளை, காணி உரிமையாளர்கள் இது தமது பூர்வீக காணி என தெரிவித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது டோசர் இயந்திரத்தின் சாரதியான பௌத்த பிக்குவின் சகோதரர் சம்பத் என்பவர் டோசர் இயந்திரத்தின் முன்பகுதியால் காணி அபகரிப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பெண்களை மோதும் விதமாக அச்சுறுத்தியுள்ளார்.

அவ்வேளை, டோசர் இயந்திரத்தின் முன்பகுதியால் மோதுண்டு காணி உரிமையாளரான பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த சம்சுதீன் சுலைகா என்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிசிமலை பௌத்த பிக்குவின் ஆதரவில் பல்வேறு பௌத்த பிக்குகள் இணைந்து குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் தொடர்ச்சியாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து, பௌத்த விகாரைகளை அமைத்துவருவதோடு பௌத்த விகாரைகளுக்கு சொந்தமான காணிகள் என பல நூற்றுக்கணக்கான நிலங்களையும் அபகரித்து வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *