3 மணி நேர ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் – மன்னார் வைத்தியசாலையில் சம்பவம்!

(UTV | கொழும்பு) –

‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை, அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த நெஞ்சுக்கூட்டை திறந்து சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொண்டு மன்னார் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் உயிர் இவ்வாறு காப்பாற்றப்பட்டது.

கடந்த 5 ஆம் திகதி வியாழன் இரவு 8.30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 35 வயது இளைஞர் ஒருவர் வலது பக்க நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடனடியாக அவர் சத்திர சிகிச்சை கூடத்துக்கு எடுக்கப்பட்டு வலது பக்க நெஞ்சறையினுள் IC tube எனப்படும் குழாய் செலுத்தப்பட்டு அவருடைய நெஞ்சுக் குழியினுள் வேகமான தொடர் குருதிப்பெருக்கு இருப்பது அவதானிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவசரமாக செய்ய வேண்டிய CT scan வசதி மற்றும் நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி என்பன மன்னார் வைத்தியசாலையில் இல்லாத காரணத்தினால் அந்த நோயாளியை யாழ்ப்பாணம் அனுப்புவதாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அவரை வெலிசறை நெஞ்சு வைத்தியசாலைக்கு அனுப்புமாறு யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் நோயாளி ஏறக்குறைய 3 லீட்டர் குருதியை இழந்து விட்ட நிலையில் குருதிப்பெருக்கு மிகவும் வேகமாக இருந்த காரணத்தினால் அவரை நோயாளர் காவு வண்டியில் பிறிதொரு வைத்தியசாலைக்கு அனுப்புவது அவரது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என முடிவு செய்யப்பட்டு மன்னார் வைத்தியசாலையிலேயே நெஞ்சறை சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எம். மதுரகீதன் தலைமையிலான சத்திர சிகிச்சை அணியும் உணர்விழப்பியல் மற்றும் அதி தீவிர சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஜூட் பிரசாந்தன் தலைமையிலான உணர்விழப்பு அணியும் இணைந்து நெஞ்சுக்கூட்டை திறந்து உள்ளே தேடி குருதி பெருக்கை கட்டுப்படுத்தும் சத்திர சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வைத்திய நிபுணர்களினால் சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவினாலும், ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவின் திறமை வாய்ந்த அவசர நிலை பராமரிப்பினாலும், ஒரு இளைஞனுடைய பெறுமதிமிக்க உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த சத்திர சிகிச்சையின் போது மன்னார் வைத்தியசாலை குருதி வங்கியின் பங்கு மிகவும் அளப்பரியதாகும். மிகப் பெரிய அளவிலான குருதி மாற்றீடு செய்யப்பட்டே இந்த இளைஞனின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கிறது. CT scan மற்றும் நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த சத்திர சிகிச்சை அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது மிகவும் சிறப்பான விடயமாக கருதப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *