மனுஷ, ஹரினின் மனுக்கள் இன்று விசாரணை!

(UTV | கொழும்பு) –

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றில் ஆரம்பமானது. ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். விஜித் மலல்கொட, அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சிக்காரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் படி, கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் செயற்குழுவிற்கு மட்டுமே உள்ளது, மேலும் கட்சியின் உறுப்பினர் பதவியை பறிக்கும் அதிகாரம் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கோ அல்லது கட்சியின் தலைமைக்கோ கிடையாது. கட்சியின் யாப்பை மீறும் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணைகளை நடத்துவது மாத்திரமே கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், கட்சியின் செயலாளர் நாயகத்தின் அறிவித்தலுக்கு அமைய அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், கட்சியின் செயற்குழு அந்த நடவடிக்கையை அங்கீகரிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார். முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த வழக்கிற்கு சிறிதும் பொருந்தாது என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார். அதன்பின், மனு மீதான விசாரணைகள் எதிர்வரும், 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *