வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் மீள்குடியேற்றம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – பிரசன்ன ரணதுங்க.

(UTV | கொழும்பு) –

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 917,143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய இன்னும் 1701 குடும்பங்களைச் சேர்ந்த 4,999 பேர் மாத்திரமே மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மன்னார் – எருக்கலம்பிட்டி ‘குவைத் ஸகாத்’ வீடமைப்புக் கிராமம் – இரண்டாம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 125 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புக் கிராமம் ‘குவைத் ஸகாத் ஹவுஸ்’ நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு 18 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். முதற்கட்டமாக 75 வீடுகள் முன்பு திறக்கப்பட்டன. அதற்காக செலவிடப்பட்ட தொகை 105 மில்லியன் ரூபா ஆகும். முப்பது வருடகால விடுதலைப் புலிகளின் யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத் தேவை 20,276 ஆகும்.

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த 3828 குடும்பங்களைச் சேர்ந்த 9683 பேர் தற்போது தாய்நாடு திரும்பியுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அந்த குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

மோதல் சூழ்நிலையினால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *