ஆயுதப்படையினர் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

(UTV | கொழும்பு) –

முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் முகமாக, இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் “ஆயுதப்படையினர் நினைவு தினம் – 2023” பிரதான வைபவமும் பொப்பி மலர் தின நிகழ்வும் நேற்று பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபியின் முன்பாக முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவு கூரும் வகையில், கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் உள்ள இராணுவ நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது. நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு பெற்ற) வரவேற்றார். சர்வ மத அனுஷ்டானங்களின் பின்னர் ஆயுதப்படையினர் நினைவு தின வைபவம் ஆரம்பமானது.

வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி உட்பட அதிதிகள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் சங்கப் பிரதிநிதிகள் இராணுவ நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இராணுவ நினைவுத் தூபியின் விசேட நூற்றாண்டு நினைவுப் பலகையை ஜனாதிபதி திறந்து வைத்தார். இராணுவ நினைவுத் தூபியின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையை வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மற்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார ஆகியோர் ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தனர். கடற்படை சிறு அதிகாரி (ஓய்வு பெற்ற) கே. நிஹால் தொகுத்த “War memorials in Sri Lanka” என்ற நூலை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா இதன்போது ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முப்படைகளின் அதிகாரிகளுடன் குழு புகைப்படத்திலும் ஜனாதிபதி இணைந்துகொண்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் த எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, விமானப்படையின் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன, அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் லுதினன் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய, இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்க அறக்கட்டளை சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் உபாலி பண்டாரதிலக உட்பட அதன் அங்கத்தவர்களும், பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவவின் மனைவி திருமதி லிலீ கொப்பேகடுவ உட்பட உயிரிழந்த முப்படை வீரர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *