நிதிச் செயலாளருக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு!

(UTV | கொழும்பு) –

2023 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுப்பதை நிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுக்கு அமைய செயற்பட தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர். உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைப்பதைத் நிறுத்தி கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி அன்று நிதியமைச்சின் செயலாளருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இடைக்கால உத்தரவை நிதியமைச்சின் செயலாளர் வேண்டுமென்றே நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் தொடர்பில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்த நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர், இது பொது நிதி தொடர்பான விடயம் என நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
நிதிக் கட்டுப்பாடு என்பது நாடாளுமன்ற விடயதானத்திற்கு உட்பட்ட செயற்பாடு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் முதற்கட்ட ஆட்சேபனைகள் தெரிவிக்கின்றன.

எனவே இது தொடர்பான மனுக்களை நிராகரிக்க வேண்டும் என நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் நீதிமன்றத்தில் பூர்வாங்க ஆட்சேபனைகளில் முன்வைத்துள்ளதாக “அத தெரண” செய்தியாளர் குறிப்பிட்டார். தீர்ப்பை அறிவித்த 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, பிரதிவாதிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறியது.
அதன்படி, இது தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *