மக்களைத் துண்டாடும் அரசியல்வாதிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – எஸ்.எம். சபீஸ்

(UTV | கொழும்பு) –

எதிர்கால சந்ததிகளை நாட்டையும், சமூகத்தையும் நேசிக்கும் தலைவர்களாக உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருப்பதாகவும், இப்போதிருக்கும் தலைவர்கள் இனவாதம், பிரதேசவாதம் பேசிப்பேசியே மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஊர்களுக்கிடையில் பிரிவினைவாதத்தை உண்டாக்கிவிட்டு அவர்களுக்கு தேவையான அரசியல் முன்னெடுப்புக்களை லாபகரமாக முன்னெடுக்கும் அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு ஒற்றுமையுடன் கூடிய வினைத்திறனான தலைமைகளை நாம் உருவாக்க முன்வர வேண்டும் என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.

பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்றத்தால் நடாத்தப்படும் “ஹில்ப் இங்கிலீஷ் ஹவுஸ்” பாலர் பாடசாலை, மற்றும் ஹில்ப் (இஸ்லாமிய) பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா நிகழ்வு அதன் தலைவர் எம்.ஜே.எம்.றிஸ்வான் தலைமையில் அட்டாளைச்சேனை ஷக்கி மண்டபத்தில் இடம்பெற்றது. பாலர் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வருடாந்த விடுகை விழாவும், பரிசளிப்பு வைபகமுமான இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தூரநோக்கு சிந்தனையற்ற தலைவர்களினால் இன்று அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை போன்ற பிரதேசங்களில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவற்றை கட்டுப்படுத்த முறையான திட்டமிடல்கள் இல்லாத தலைமைத்துவங்கள் ஓய்வாக வீட்டில் அமரும் காலம் கனிந்துள்ளது. எமது பிள்ளைகளின் திறமைகளை சரியாக அடையாளம் கண்டு அவர்களை வழி நடத்துவதன் மூலம் சிறந்த பிரஜைகளையும் தாண்டி தலைசிறந்த தலைவர்களை நாம் உருவாக்க முடியும் என்றார். மேலும் குழந்தைகளின் உளவியல், தலைவர்களாக குழந்தைகளை உருவாக்க வேண்டிய அவசியம், இன்றைய சமூக நீரோட்டத்தில் குழந்தை வளர்ப்பின் சவால்கள், பெற்றோர்களின் அவசர கால வேளைகளில் குழந்தைகள் பாதிக்கப்படும் விதம் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் அதிபர் எம்.எஸ்.எம். ஹனிபா, உட்பட முக்கிய பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களை வாழ்த்தி பாடசாலைகளுக்கு வழியனுப்பி வைத்த இந்நிகழ்வில் கிழக்கின் கேடயத்தால் மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *