நடிகர் விஜய்க்கு ஜீவன் வாழ்த்து!

(UTV | கொழும்பு) –

“ சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு, “நடிகர் விஜய் சினிமா துறையில் உச்சம் தொட்டவர். அவருக்கென இரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதியென இரசிகர்கள் அவரை கொண்டாடும் அளவுக்கு சினிமாத்துறையில் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் நடத்துகொண்டுள்ளார்.

அதுமட்டுமல்ல தனக்காக உருவான ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் ஊடாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார். இந்நிலையில் அப்பணிகளை மென்மேலும் முன்னெடுப்பதற்காகவும், சமத்துவம், சமூக நீதிக்காகவும் விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றி கழகமாக அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. சினிமாவில் உள்ள செல்வாக்கை மட்டும் பயன்படுத்தி எடுத்தோம், கவிழ்த்தோம் என அரசியல் பயணத்தை ஆரம்பிக்காமல் நன்கு திட்டமிடலுடன் அப்பயணத்தை விஜய் ஆரம்பித்துள்ளார் என்பது அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மூலம் உறுதியாகின்றது.

நல்லாட்சி, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை மையப்படுத்தியமாக அரசியல் பயணம் அமையும் என விஜய் அறிவித்துள்ளதை வரவேற்கின்றோம். இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு சமத்துவம், சமூக நீதியை வலியுறுத்தியே எமது அரசியல் பயணமும் தொடர்கின்றது. அந்தவகையில் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான பயணத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணம் வெற்றியளிக்க மலையக மக்கள் சார்பிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இணைந்து பயணிக்ககூடிய இடங்களில் இணைந்து பயணிக்கவும், புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய இடங்களில் புரிந்துணர்வுடன் செயற்படவும் நாம் தயாராகவே இருக்கின்றோம் என்ற செய்தியையும் விஜய்க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.” – என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *