(UTV | கொழும்பு) – தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த குடும்ப உறுப்பினர்களின் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை- சியம்பலாண்டுவ பிரதான வீதியின் தமண பொலிஸ் நியாயாதிக்க பகுதியிலுள்ள குருட்டு கந்த எனும் பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக தமண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமண பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முஹம்மட் முஸ்தபா தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (10) காலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் தனது மகளின் பட்டமளிப்பு விழாவிற்கு திக்வல்லையிலிருந்து வருகை தந்த குடும்ப உறுப்பினர்களின் வாகனமே பாதையின் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உபபொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை தமண பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්