ஆசிரிய இடமாற்றத்திற்கு எதிராக இடைக்காலத் தடை – கிழக்குமாகாண மேல் நீதிமன்றம்

கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரினால் 509 ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. அவ்விடமாற்றத்தில் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியையான பாத்திமா ருகையா அவர்கள் பொத்துவில் – ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.
ஆசிரியை பாத்திமா றுகையா தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் சட்டரீதியானது அல்ல என்ற அடிப்படையில் எழுத்தானை (Writ) மனுவொன்றை சட்டத்தரணி ஆதம் லெப்பை ஆஸாத் அவர்களின் ஆலோசனையில் கல்முனையில் அமையப்பெற்றுள்ள கிழக்குமாகாண மேல் மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில் பிரதிவாதிகளாக மாகாணக் கல்விப்பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளார், ஆசிரியர் இடமாற்ற சபை, ஆசிரியர் இடமாற்ற மேன் முறையீட்டு சபை என 27 பேர் பெயரிடப்பட்டிருந்தனர்.
ஆசிரியை பாத்திமா ருகையா சார்பாக சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் அறிவுத்தல் சட்டத்தரணியாக சட்டத்தரணி அம்ஜாட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
ஆசிரியை சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் பல வழிகளில் தவறானது என வாதிட்டனர். கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் ஆளணி காலாவதியான 1/2016 ம் ஆண்டைய ஆளணி முறையை வைத்துச் செய்யப்பட்டது என்றும், இடமாற்ற மேன்முறையீட்டு சபையின் அங்கத்தவர்கள் கிழக்கு மாகாண இடமாற்றக் கொள்கைக்கு முரணாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஒரு பாடசாலையில் வெற்றிடம் இருக்கும் போது இன்னொரு வலயத்திற்கு அனுப்பப்படுவது தவறானது எனவும் கடுமையாக வாதாடியிருந்தனர்.
இரு தரப்பினரினதும் சமர்ப்பணங்களை செவியுற்ற நீதிமன்றம் காலாவதியான ஆளணியை அடிப்படையாக வைத்து இடமாற்றங்களை மேற்கொண்டமை சட்ட ரீதியானது அல்ல என்ற அடிப்படையில் குறித்த ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக அடுத்த திகதி வரைக்கும் இடைக்காலத்தடையை விதித்து குறித்த ஆசிரியரை தனது பழைய பாடசாலையிலேயை கற்பிக்குமாறு இன்று (04) கட்டளையிட்டது.
கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் செய்யப்பட்ட இடமாற்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு றுகையா அவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத்தடையைத் தொடர்ந்து பல ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை நீதி மன்றில் சவாலுக்குட்படுத்தத் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *