ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விசாரணை முடியும் வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனமீதான அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் இந்தியாவின் பின்னணி இருப்பதாக குற்றப்புலனாய்வுத்துறையிடம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், அவரிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரித்தெடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன.
மைத்திரிபாலவுருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க , நீதிமன்றம் சென்ற நிலையிலேயே இந்த செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி அவரிடம் இருந்த தலைவர் பொறுப்பு தற்போது அகற்றப்பட்டு பதில் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஏனைய பொறுப்புக்களும் மாற்றப்பட்டுள்ளன. எனினும் மைத்திரிபாலவும் இதற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அவரும் அரசாங்கத்தின் நிதியமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்சவை, கட்சிக்கான தமது தரப்பின் பதில் தலைவராக நியமித்துள்ளார்.
இந்தநிலையில் இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிரான கட்சி என்ற தோற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கும் கட்சியின் தரப்பு முக்கிய உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண, பைசர் முஸ்தபா மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் அடங்கியிருந்தனர். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் வெளியாகாதபோதும், இந்தியாவுக்கு எதிராக தாம் கூறிய கருத்துக்கு பதிலளிக்க வேண்டியது மைத்திரிபாலவே தவிர கட்சியல்ல என்ற நிலை நிறுவப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரத்தில் இந்திய இராஜதந்திரிகளை சந்திப்பதற்கு மைத்திரிபால முயற்சித்தார் என்றும், எனினும் அது சாத்தியமாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. TW