ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடு!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 11 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.223 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 139 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. காணியுடன் கூடிய புதிய வீடு கட்டுதல், புதிய வீடுகள் கட்டுதல், வீடுகளை புனரமைப்பு செய்தல் போன்ற பணிகள் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கம்பஹா கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் அதிகளவான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுவாபிட்டிய தேவாலயத்துடன் தொடர்புடைய 144 குடும்பங்களுக்கு இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயங்கள் தொடர்பான வீடமைப்பு திட்டத்திற்காக மாத்திரம் 90.855 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை தேவாலயம் தொடர்பில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 09 குடும்பங்களுக்கு வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11 வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். வீடமைப்புத் திட்டத்தை விரைவாக முடிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, ஈஸ்டர் தினத்தன்று தாக்குதலுக்கு உள்ளான கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அரசாங்கம் புதிய ஞாயிறு அறநெறிப் பாடசாலை கட்டிடத்தையும் நிர்மாணித்துள்ளது. இது புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சினால் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 13 கோடிக்கு மேல். 14 வகுப்பறைகளைக் கொண்ட இந்த ஞாயிறு அறநெறிப் பாடசாலைக் கட்டிடம் 02 மாடிகளைக் கொண்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இதன் நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றதுடன், கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இக்கட்டடத்தை தேவாலயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *