புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்.

(UTV | கொழும்பு) –

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி – ஹால் டி கோல் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற கல்வி நவீனமயமாக்கலின் புதிய அத்தியாயமாக தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு 2,000 நவீன வகுப்பறைகள் மற்றும் 2,000 டெப் கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திர் ரமேஷ் பத்திரன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய தென் மாகாண சபைக்கு கிடைத்த 3,000 இலட்சம் ரூபாய் (30 கோடி) நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் 150 பாடசாலைகள் காலி மாவட்டத்திலும் ஏனைய 50 பாடசாலைகள் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

ஒரு வகுப்பறைக்கு 10 டெப் கணினிகள் என்ற வகையில் 200 வகுப்பறைகளுக்கு 2,000 டெப் கணினிகள் வழங்கப்பட்டன.

இதன் அடையாள அம்சமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர் சந்தூஷ் ஜாவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

“தற்போது உலகம் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது.

அதற்கேற்ப, இந்நாட்டின் கல்வி முறையும் நவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும்.

அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று நாம் பல கல்விக் கொள்கைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம்.

அந்தக் கல்விக் கொள்கைகள் அன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது.

இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி தேவைப்படும்.

அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிளை அரசாங்கம் ஏற்படுத்தும்.

மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதில் அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைக்கு ஐ.ஐ.டி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுடன் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

மலேசியாவில் நான் எலான் மஸ்குடன் கலந்துரையாடினேன். அவரது நிறுவனத்தின் இணையத் தொழில்நுட்பம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இதன் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இன்று தென் மாகாணம் கல்வித்துறையில் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் மாகாணமாக மாறியுள்ளது.

தென் மாகாணத்தின் முதலாவது டச்சு பாடசாலையான பத்தேகம கல்லூரி இன்று தேசிய பாடசாலையாக மாறியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு ஏற்ற சந்ததியை உருவாக்கி ஒரு நாடாக உலகையே வெல்லும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த:

“இலவசக் கல்விச் சட்டம் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி, 46% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 93% ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நவீன வகுப்பறைகள் என்பன அவசியமாகும். அதற்கு இந்தியா வழங்கி ஆதரவுக்கு நன்றி.

இன்று தென் மாகாணத்திலுள்ள இருநூறு பாடசாலைகளில் நவீன வகுப்பறைகள் உள்ளன.

2,000 டெப் கணினிகள் சொந்தமாக உள்ளன. எதிர்காலத்தில் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கலில் உள்வாங்கப்படும்.

அதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,250 பாடசாலைகள் தற்போது வலையமைப்பின் ஊடாக இணைக்கப்பட்டுள்ளன.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம்.

இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப அறிவைப் பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களில் 93% தொழில் சந்தையில் தொழில்வாய்ப்புக்கள் உள்ளன. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உலகை வெல்லும் வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண:

“இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி. நாம் தற்போது இந்த நூற்றாண்டின் வலுவான காலகட்டத்தை கடந்து வருகிறோம்.

காலியில் பிறந்த கல்வி அமைச்சராக இருந்த சீ. டபிள்யூ. டபிள்யூ. கண்ணங்கரா கொண்டு வந்த இலவசக் கல்விச் சட்டம், பாடசாலை மாணவர்களின் வருகையை 52% இலிருந்து 99% ஆக உயர்த்தியது.

பாடசாலைகளின் எண்ணிக்கை 3,000 லிருந்து 10,000 ஆக உயர்த்தியது.

அதுவரை அரசாங்கத்துக்கு சொந்தமாகவிருந்த ஒரேயொரு பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக 13 பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன.

பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 250 இல் இருந்து 45,000 ஆக அதிகரித்தது.

கல்வியறிவு பெற்ற சமூகம் உருவாக்கப்பட்டதன் காரணமாக, உலகின் தொழில் புரட்சியின்போது பின்னால் இருந்த இலங்கை, உலகிற்கு இணையாக முன்னேறப் பயணத்தை ஆரம்பித்தது.

அடுத்த நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு, கணினி நுண்ணறிவு, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் உலகிற்கு இணையாக முன்னேற வாய்ப்பு ஏற்படும். அதற்கான நவீன கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கல்வி சீர்திருத்தங்களை சரியான தொலைநோக்கு பார்வையுடன் முன்னெடுத்து வருகின்றார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்துஷ் ஜா:

அண்டை நாடாக, இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கைக்கு தேவையான தொழில்நுட்ப அறிவுக்குத் தேவையான வசதிகளையும் உதவிகளையும் இந்தியா தொடர்ந்து வழங்கும்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள மற்றும் தென் மாகாண கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *