ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த சஜித்

ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதே ஓய்வூதியர்களின் குறிக்கோளாக இருந்தாலும், அவர்களின் ஓய்வூதியம் முறையாக கிடைக்காததாலும், அரசின் பல்வேறு கொள்கைகளாலும், ஓய்வூதியக்காரர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தொழில் ரீதியாக பேரம் பேச முடியாத ஒரு குழுவாக இருக்கும் ஓய்வூதியம் பெருநர்களின் குறைபாடுகளை உணர்ந்து செயல்படுவது இன்றியமையாத சமூகப் பொறுப்பாகும்.

இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டில் முதியோர் அதிகரிப்பு எண்ணிக்கை என்ன?, அவர்களில் எத்தனை பேர் வறுமைக் கோட்டிற்கு கீழான பின்னணியில் வாழ்கின்றனர்? வயோதிபர்கள் ஏதேனும் ஒரு வகையான சமூகப் பாதுகாப்பிற்கு உட்பட்டவர்களா இருக்கின்றனரா? என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகளை எழுப்பினார்.

அத்துடன், முதியோர்களுக்கு மருந்துகள் மற்றும் பயணங்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுவதால், அவர்களை ஏதேனும் ஒரு வகையிலான சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

இன்று இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த அரச துறை ஓய்வூதியதாரர்கள், 2024, 2030 மற்றும் 2035 ஆண்டுகளில் கணிக்கப்பட்டுள்ள மொத்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான செலவுகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினர்.

ஓய்வூதியத் திணைக்களம் 2016 ஆம் ஆண்டில் அரச துறை ஓய்வூதியதாரர்களுக்கு கடன் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது. மாறுபட்ட வட்டி விகிதத்தில் கடன் பெறுவதால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இது பெரும் கடன் சுமைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் வழங்க எதிர்பார்க்கும் தீர்வுகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், சிரேஷ்ட பிரஜைகளின் நிரந்தர வைப்புக்களுக்கான வட்டி 15% லிருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சில வங்கிகள் இந்த நிலையான வைப்பு மீதான வட்டிக்கு கூட வரி விதிக்கின்றன.

இந்த வரிப்பணம் மீண்டும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு கிடைக்கும் என கூறப்பட்டாலும், சிக்கலான மற்றும் இங்கு நிலவும் குழப்பம் காரணமாக பல சிரேஷ்ட பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்காமல் இருப்பதால் எளிதான முறையை பின்பற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்த வட்டியை மீண்டும் 15% ஆக அதிகரிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் அரச பத்திரங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தால் செய்யப்படும் முதலீடுகளுக்கான வட்டி சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றும் இங்கு அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் தீர்க்கப்படாத ஓய்வூதியப் பிரச்சினைகளில், 2016 மற்றும் 2020 க்கு இடையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 2016 க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர் அதிபர் சேவையில் சம்பள உயர்வு பெறாத ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் பிரதானமாக காணப்படுகின்றன.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால், அவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு ஒன்றினை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

2016-2020 காலப்பகுதியில், பிரதான ஓய்வூதிய கொடுப்பனவு 2 பகுதிகளாக வழங்கப்பட்டது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்ட பின்னர் இந்த செயல்முறை நிறுத்தப்பட்டது.

இதுவரை 120000 ஓய்வூதியதாரர்கள் பாரபட்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பலர் இறந்துள்ளனர். இது ஒரு சாபக்கேடு, இதைச் செய்யும் போது ஆளும் தரப்பு மௌனம் காத்தது.

இதனை தற்போதேனும் திருத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டு புத்துயிர் பெற்றிருந்தால், ஓய்வூதிய சமூகத்திற்கான இந்தக் கடமையை நிறைவேற்றிக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

7 இலட்சம் ஓய்வூதியர்கள் 2004 இல் 96 சம்பளமாகவும், 2006 இல் 97 சம்பளமாகவும் கொண்டு வரப்பட்டனர். 2015, 2016 மற்றும் 2019, 2017 களில் இணக்கப்பாடுகளுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பள முரண்பாட்டினால் 480,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கம் பதில் கூற வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

தற்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் கீழ் ஒரு ஓய்வூதியம் பெறக்கூடிய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத் தொகையில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

30 ஆண்டு கால சேவையை நிறைவு செய்தால் சராசரியாக 85% ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும், புதிய முறையில் இங்கு வெட்டு ஏற்படுகிறது.

அது எந்தளவு தொகை? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *