வீட்டை சேதப்படுத்திய யானை – புத்தளத்தில் சம்பவம்.

புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குற்பட்ட கோம்பகஸ்வெவ கிராமத்தில் நேற்று (11) இரவு புகுந்த காட்டு யானையொன்று வீடொன்றினை சேதப்படுத்தியுள்ளன.

இதன்போது, அந்த வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பி.எம்.சஞ்சீவ என்பவரின் வீட்டையே இவ்வாறு காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

பெரும் சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டின் முன் பகுதியை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அந்த வீட்டில் வரவேற்பறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு நெல்மூடைகளை இழுத்துச் சென்றுள்ளது.

மேலும், அங்கு இருந்த தென்னை மரங்களுக்கும் சேதம் விளைவித்துச் சென்றுள்ளதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த யானை வீட்டை உடைக்க ஆரம்பித்த போது அந்த வீட்டில் தானும், தனது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், பெரும் சத்தத்துடன் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதற்கு அந்த யானை முயற்சி செய்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், வீட்டுக்குள் இருந்து கூக்குரலிட்ட போது கிராமத்திலுள்ள அயலவர்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் காட்டு யானையை துரத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தனது வீடு கடந்த வருடமும் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், தனது வீட்டை திருத்தியமைக்க அப்போது 2 இலட்சம் ரூபா வரை செலவு செய்ததாகவும் ஆனால், நஷ்டஈடாக 12,500 ரூபா மாத்திரமே தமக்கு கிடைத்ததாகவும அந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பி.எம்.சஞ்சீவ குறிப்பிட்டார்.

இதேவேளை, பொதுமக்களுக்கும் யானைக்கும் இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் போராட்டத்தால் பல மனித உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு இரவுகளிலும் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை காணப்படுவதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

யானையின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கு வீடுகளை சுற்றி யானை மின் வேலி அமைக்க ஒரு மீற்றருக்கு 55,000 ரூபா செலவு செய்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இன்று வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, யானைகளின் பிரச்சினையிலிருந்து தம்மை விடுவிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *