பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் அடித்து கொலை – மூவர் கைது.

பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துபிட்டிய பின்னகொடெல்ல பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி நபர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த நபரின் தலை இரண்டாக பிளவுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மரத்துண்டு ஒன்று காணப்பட்டதையடுத்து, பொலிஸ் மோப்ப நாயொன்று ஈடுபடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அப்போது, ​​அப்பகுதியில் உள்ள லயன் குடியிருப்பு அறையொன்றின் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவரின் அருகில் அந்த மோப்ப நாய் சென்று நின்றுள்ளது.

அதன்படி, அவரை கைது செய்து விசாரணை நடத்தியதையடுத்து, கொலையில் தொடர்புடைய கணவன், மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், குறித்த பெண்ணிடம் இரண்டு தடவைகள் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தனது கணவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து கடந்த 11ஆம் திகதி இரவு அவரது வீட்டுக்குச் சென்று தாக்கியதாகவும், குறித்த நபர் தப்பி ஓடிய போது  துரத்திச் சென்று மீண்டும் தாக்கியதாகவும் குறித்த சந்தேக நபரான பெண்தெரிவித்துள்ளார்.

பின்னர் சந்தேகநபர்கள் கலவானை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *