ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதலாவது இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை இலங்கையரான தர்ஷன் செல்வராஜா பாரிஸில் நேற்று முன்தினம் ஏந்திச் சென்றார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்ற முதல் இலங்கையராக தர்ஷன் செல்வராஜா வரலாறு படைத்துள்ளார் என பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதுடன், இது இலங்கைக்கு பெருமையான தருணம் எனவும் தெரிவித்துள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற பிரெஞ்சு பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார்.

இப்போட்டிக்காக, கிறீஸின் நாட்டின் ஒலிம்பியா நகரில் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடர் 19 ஆம் நூற்றாண்டின் பாய்மரக் கப்பல் மூலம் கடந்த மே 8 ஆம் திகதி பிரான்ஸை சென்றடைந்தது. அதன்பின் பல்லாயிரக்கணக்கானோரால் தொடர் ஓட்டம் மூலம் பிரான்ஸின் சுமார் 450 நகரங்களுக்கு ஒலிம்பிக் சுடர் கொண்டுசெல்லப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள பாரிஸ் நகரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடவையாக ஒலிம்பிக் சுடர் சென்றடைந்த நிலையில், திங்கட்கிழமை (15) மாலை தர்ஷன் செல்வராஜா ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றார்.

இலங்கையின்  தேசிய கொடியுனும் பலர் வீதிகளில் திரண்டிருந்து அவரை வரவேற்றனர்.  38 வயதான தர்ஷன் செல்வராஜா, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த நிலையில் 16 வருடங்களாக பேக்கரி தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வருடம், பிரான்ஸின் பாரம்பரிய ‘பகெட்’ எனும் பாண் தயாரிப்புக்கான வருடாந்த  போட்டியில்  126 பேரை தோற்கடித்து தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றார். அதன் மூலம் ஒரு வருடகாலத்துக்கு பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகைக்கு பாண் விநியோகிக்கும் உரிமையையும் பெற்றுக்கொண்டிருந்தார். இவ்வெற்றியைத் தொடர்ந்து அவர் ஒலிம்பிக்  சுடரை ஏந்திச் செல்பவர்களில் ஒருவராக தெரிவானார்.

ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்காக தன்னையும் தெரிவுசெய்த பிரெஞ்சு விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி கஸ்டேரா உட்பட தெரிவுக்குழுவினருக்கு தான் நன்றி தெரிவிப்பதாக ஏற்கெனவே தர்ஷன் செல்வராஜா தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *