நாட்டில் தலைதூக்கிவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதலமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில்  கெராட் ரான் லேனட் (GERHARD RAN”T LAND)  தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.

இதன் போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ ஏ எல் அசீஸ் ஆகியோரும் பங்கேற்றனர் இதன் போது தற்போது நாட்டில் முஸ்லிங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் மிக விரிவாக எடுத்துரைத்தார்,

அண்மைக்காலமாக முஸ்லிங்களின் மதஸ்தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பிலும் இதன் போது  கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் கட்டியெழுப்பப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு  இவ்வாறான இனவாத செயற்பாடுகள் பாரிய அச்சுறுத்தலாக திகழ்வதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் முஸ்லிங்களின் மத சுதந்திரம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டில் முஸ்லிங்கள் மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கூறினார்.

எனவே  நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை அதிகாரப்பகிர்வு உடனடியாக மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் திவிநெகும போன்ற திட்டங்களால் பறித்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீண்டும் கையளிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2018 மற்றும் 2019 ஆண்டுக்கான திட்டங்களில் விதவைகள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது,

அத்துடன் கிழக்கு மாகாணம் முழுவதும் ஆற்றல் மேம்பாட்டு மையங்களை நிறுவி அதனூடாக வினைத்திறன் மிக்க அரச சேவையினை முன்னெடுப்பது  தொடர்பில் இதன் போது கிழக்கு  மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானியால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பிலும் உள்ளூராட்சி மன்றங்களின் தொழிற்சாலைகளை உருவாக்குவது தொடர்பில் அரச மற்றும் தனியார் ஒப்பந்தங்களினூடாக இவற்றை  2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான திட்டங்களுக்குள் இவற்றை உள்வாங்க வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயம்,மீன்பிடி ,கால்நடை ,கைத்தொழில் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்ததுடன் அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யு ஆ கீத் திருகோணமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *