இன்றும் பலத்த மழை:மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நேற்று மாலைநேர நிலவர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

92 பேர் காணாமல் போயுள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளனர்.

அனர்த்த நிலைமைகள் காரணமாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 514 குடும்பங்களை சேர்ந்த ஆறு லட்சத்து 74 ஆயிரத்து 553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்று பிற்பகல் 2 மணிமுதல் இன்று பிற்பகல் 2 மணிவரை இந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதனுடன் சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் 39 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் பலாவெல, பாரவத்த மற்றும் கலவான முதலான தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட 14 பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில், மழையுடனான கால நிலை மேலும் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *